இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் 89: 26-ல், “நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.” என கூறப்பட்டுள்ளது.

நமது இறைவேண்டலில் நாம் இறைவனை ‘அப்பா! தந்தையே! என அழைப்பதை வழக்கமாக்கிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

நாமும் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடந்து முப்பது மடங்காகவும், அறுபது மடங்காகவும், நூறு மடங்காகவும் பயன் அளிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

சீனாவில் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலச்சரிவில் உயிருடன் இடிபாடுளிடையே சிக்கியுள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

ஆயரும், சிறந்த மறையுரையாளரும், திருச்சபை அறிவித்த மறைவல்லுனர்களில் ஒருவரும், எண்ணற்ற மக்களை மனம் மாற்றி கிறித்துவத்துக்குள் அழைத்து வந்தவரும் இன்றைய புனிதருமான புனித பிரான்சிஸ் டி சலேஸை நம் திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.