சனவரி 24 : நற்செய்தி வாசகம்

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20

அக்காலத்தில்

இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார்.

அவர் அவர்களுக்குக் கற்பித்தது: “இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் ‘ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்’ “ என்று கூறினார்.

மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————————————

பொதுக்காலத்தின் மூன்றாம் வாரம்

புதன்கிழமை

I 2சாமுவேல் 7:4-17

II மாற்கு 4:1-20

நூறு மடங்காகப் பலன் தருவர்

இறைவார்த்தையும் மகிழ்வான வாழ்வும்:

புதிதாகக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பெண்மணி ஒருவர் தனது வீட்டிற்கு முன்பாக இருந்த மரத்தடியில், மிகவும் ஆர்வமாய் இறைவார்த்தையை வாசித்துக் கொடிருந்தார். அப்பொழுது அங்கு வந்த அவருடைய தோழி ஒருத்தி அவரிடம், “அப்படியென்ன இருக்கின்றது என்று இதை இவ்வளவு ஆர்வமாய் வாசித்துக் கொண்டிருக்கின்றாய்?” என்றார்.

“இது இறைவார்த்தை. அதனால்தான் இதை நான் இவ்வளவு ஆர்வமாய் வாசித்துக்கொண்டிருக்கின்றேன்” என்றார் கிறிஸ்தவப் பெண்மணி. “இறைவார்த்தையா, யார் சொன்னது இது இறைவார்த்தை என்று?” என்று தோழி கிண்டலாகப் பேசித் தொடங்கினாள். உடனே, கிறிஸ்தவப் பெண்மணி அவளிடம், “வானத்தில் கதிரவன் இருக்கிறது அல்லவா! அதைக் கதிரவன் என்று யார் உன்னிடத்தில் சொன்னது?” என்று கேட்டார். அதற்கு அவளுடைய தோழி, “கதிரவனைக் கதிரவன் என்று யாரும் என்னிடத்தில் சொல்லவில்லை. அதுவாகத்தான் சொன்னது” என்றாள்.

அதுவரைக்கும் பொறுமையாகப் பேசிக்கொண்டிருந்த கிறிஸ்தவப் பெண்மணி, தனது தோழி இவ்வாறு பதில் சொன்னதும் அவளிடம், “இது இறைவார்த்தைதான் என்று யாரும் என்னிடத்தில் சொல்லவில்லை. மாறாக, இதை நான் வாசிக்கின்றபோது கடவுளின் பேரன்பையும் இரக்கத்தையும் உடனிருப்பையும் உணர்கிறேன். அதனால்தான் இதை இறைவார்த்தை என்கிறேன்” என்றார்.

ஆம், இறைவார்த்தையை நாம் வாசிக்கின்றபோது இறைவனிடம் பேரன்பையும் இரக்கத்தையும் உடனிருப்பையும் நமது வாழ்வில் உணர்ந்துகொள்கின்றோம். அதையே நாம் வாழ்வாக்கின்றபோது இறைவனின் ஆசியைப் பெறுகின்றோம். இன்று நாம் வாசிக்கக்கேட்ட வாசகங்கள், இறைவார்த்தையைக் கேட்டு நடக்கின்றபோது ஒருவர் எத்தகைய ஆசியைப் பெறுகின்றார் என்பதை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

ஒருவருடைய உயர்வும் தாழ்வும் அவர் இறைவார்த்தைக்கு எப்படிப் பதிலளிக்கின்றார் என்பதைப் பொறுத்தே இருக்கும் என்கிற உண்மையை எடுத்துக்கூறும் விதைப்பவர் உவமையைப் பற்றி நற்செய்தியில் இயேசு கூறுகின்றார். இந்த உவமையின் இறுதியில் இயேசு கூறுகின்ற, “இவர்களுள் சிலர் முப்பது மடங்காவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காவும் பயன் அளிப்பர்” என்கிற வார்த்தைகள் கவனிக்கத் தக்கவை.

நிலத்தில் பயரிடும் ஒருவர் கூடுதலாக எட்டு மடங்கு பயன் பெறலாம். அதையும் மிஞ்சினால் பத்து மடங்கு பலன் பெறலாம்; ஆனால், ஆண்டவர் இயேசு இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்பவர் நூறு மடங்கு பயன் அளிப்பர் என்கிறார். இதுதான் இறைவார்த்தைக்கு உரிய வல்லமை. இறைவார்த்தை ஆற்றல் வாய்ந்தது (எபி 4:12) என்பதால், அப்படிப்பட்ட வார்த்தையின் படி நடப்பவர் நூறு மடங்கு பயன் அளிப்பர்.

Comments are closed.