இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்13.01.2024

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

பிறந்த இப்புதிய வருடம் நமக்கு எல்லா விதத்திலும் ஆசீர்வாதமாய் இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்

“முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.” என வாசிக்கின்றோம்.

பாவத்தில் விழுந்து கிடக்கும் யாராவது ஒருவரை, இன்றைய நற்செய்தியில் வரும் நால்வரைப் போன்று இயேசுவிடம் கொண்டு வர நாம் மனமுவந்து முயற்சி எடுக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

‘சிசிலியின் சிறந்த கத்தி’ என அழைக்கப்பட்டவரும், இன்றையப் புனிதருமான கார்லியோன் நகர புனித பெர்னார்டு சிறுவயதில் மிகுந்த சினமும் பிறரை கத்தியால் தாக்கும் குணத்தையும் கொண்டிருந்தார். பின்னர் மனம் மாறி கப்புச்சின் ஃப்ரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து மறைபணியாளரானார்.

முன் கோபமும், முரட்டு குணமும் கொண்ட இளைஞர்கள் மனம் மாற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.