இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 05.01.2024

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், “நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிள்ளைகள் யாரென்றும் புலப்படும்.” என திருத்தூதர் யோவான் கூறுகிறார்.

நாம் நேர்மையாளர்களாக இருந்து பிறரிடம் அன்பு செலுத்தி கடவுளின் பிள்ளைகளாக இருந்திட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்

அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.” என வாசித்தோம்.

எளிய, தூய உள்ளங்களில் நம் ஆண்டவர் என்றும் தங்கிடுவார். ‘இம்மானுவேல்’ என்னும் இயேசு பாலன் நம்மோடு என்றும் இருந்திட, தங்கிட நமது உள்ளங்களை தூயதாக்கிட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

பிறந்த இப்புதிய ஆண்டு முழுவதும் தூய ஆவியானவர் நம்மோடு இருந்து நம்மைக் காத்து வழி நடத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

இந்த ஆண்டு முழுவதும் நம் குடும்பங்களில் நல்ல ஆரோக்கியத்தை பெற்றுத் தர வேண்டி ஆரோக்கிய அன்னையிடம் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.