டிசம்பர் 27 : நற்செய்தி வாசகம்

மற்ற சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்

மற்ற சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 2-8

வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்.

இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————-

“கண்டார், நம்பினார், அறிவித்தார்”

புனித யோவான்

I 1 யோவான் 1: 1-4

II யோவான் 20: 2-8

“கண்டார், நம்பினார், அறிவித்தார்”

தயாரிப்பின்றி ஆண்டவரின் வார்த்தையை அறிவித்தவர்:

வயதான அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். இவர் மறையுரைகளை ஒழுங்காகத் தயாரிப்பதில்லை. இவர் திருப்பலிக்கு முன்பு, பீடத்தின் ஓரத்தில் முழங்கால் படியிட்டு, “ஆண்டவரே! இன்றைய நாளில் நான் என்ன செய்தியை மக்களுக்குச் சொல்லவேண்டும். என்பதை எனக்கு வெளிப்படுத்தும்” என்று வேண்டிவிட்டு, ‘வாயில் வந்ததையெல்லாம்’ மக்களுக்குப் போதிப்பார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், திருப்பலி நிறைவேற்றுவதற்கு முன்பாக அவர் வழக்கம்போல், பீடத்தில் ஓரத்தில் முழங்கால் படியிட்டு, “ஆண்டவரே, இன்றைய நாளில் நான் என்ன செய்தியை மக்களுக்குப் போதிக்கவேண்டும் என்பதை எனக்கு வெளிப்படுத்தும்” என்றார். அப்பொழுது ஆண்டவர் இவரிடம், “என் அன்பு மகனே! இன்றைய நாளில் நான் வெளிப்படுத்தும் செய்தி இதுதான்: நீ ஒரு சரியான சோம்பேறி!.”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அந்த வயதான அருள்பணியாளர் திடுக்கிட்டார். இதன் பிறகு அவர் நல்ல முறையில் மறையுரைத் தயாரித்து, வழங்கினார்.

ஆம், கடவுளுடைய வார்த்தையை அறிவிக்கின்றபோது இறையன்பவம் பெற்றவர்களாய்த் தகுந்த தயாரிப்புடன், அறிவிக்கவேண்டும். இல்லையென்றால் அது வெற்றுச் சடங்காகிவிடும். இன்று நாம் விழாக் கொண்டாடும் திருத்தூதரும் நற்செய்தியாளருமான புனித யோவான் ஆழ்ந்த இறையனுபவம் பெற்று, ஆண்டவரின் வார்த்தையை அறிவித்தார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

மகதலா மரியா வழியாக, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்ர்” என்ற செய்தியை அறிய வருகிறார் யோவான். உடனே அவர் கல்லறைக்குச் சென்று, இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டு, மற்ற துணிகளோடு இல்லாமல், ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, இயேசு உண்மையாக உயிர்த்து விட்டார் என்பதை நம்புகின்றார்.

இங்கு இயேசு உயிர்ந்தெழுந்தபோதும், இலாசர் உயிர்பெறும்போதும் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். இலாசர் உயிர்பெறும்போது, அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன (யோவா 11:44). இயேசுவைப் பொறுத்தளவில், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டு, மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. இதுவே இயேசு உயிர்த்தெழுந்ததற்கும், இலாசர் உயிர்பெறுதலுக்கும் இடையே உள்ள வித்தியாசமாகும்.

ஆண்டவர் இயேசு உண்மையாக உயிர்த்தெழுந்ததை நம்பிய யோவான், அதையும் ஆண்டவரோடு இருந்து பெற்ற அனுபவத்தையும் தனக்குள் வைத்துக்கொள்ளாமல், மக்களுக்கு அறிவிக்கின்றார். ஆதலால், நாம் ஒவ்வொருவரும் யோவானைப் போன்று இறை அனுபவம் பெற வேண்டும். அந்த அனுபவத்தை நமக்குள் வைத்துக்கொள்ளாமல், அதை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டும். அதுவே, நாம் செய்ய வேண்டிய தலையாய செயல்

Comments are closed.