டிசம்பர் 15 : நற்செய்தி வாசகம்
மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19
இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘அவன் பேய்பிடித்தவன்’ என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————————-
பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவர் நானே!
திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை
I எசாயா 48: 17-19
II மத்தேயு 48: 17-19
பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவர் நானே!
ஆசிரியரால் கொலைகாரனான மாணவன்:
இங்கிலாந்தில் பெரிய கொலைகாரனாகவும் கொள்ளைக்காரனாகவும் இருந்தவன் ஸ்டார் டெய்லி. இவன் ஏன் இப்படிக் கொலைகாரனாகவும் கொள்ளைக்காரனாகவும் ஆனான் என்பதற்குச் சொல்லப்படுகின்ற நிகழ்வு இது.
ஸ்டார் டெய்லி இயல்பிலேயே கூசச் சுபாவம் உடையவன், தவிர, எதையும் சரியாக வாசிக்கத் தெரியாது; திக்கித் திக்கித்தான் வாசிப்பான். ஒருநாள் அவனுடைய வகுப்பாசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, அவனை எழுந்து வாசிக்கச் சொன்னார். அவன் சரியாக வாசிக்காமல் திக்கித் திக்கி வாசித்தான். இதனால் அவனுடைய வகுப்பறையில் இருந்த எல்லா மாணவர்களும், அவன் உடன் பிறந்த தங்கை உட்பட அவனைப் பார்த்துச் சிரித்தார்கள்.
இதையெல்லாம் வகுப்பாசிரியர் பார்த்தார். அவர் நினைத்திருந்தால், ஸ்டார் டெய்லியைப் தொடர்ந்து வாசிக்கவிடாமல் நிறுத்தி இருக்கலாம். ஆனால், அவர் மாணவர்கள் இன்னும் நன்றாகச் சிரிக்கட்டும் என்று, ஸ்டார் டெய்லியை மேலும் வாசிக்கச் சொன்னார். அவனும் அவ்வாறு செய்ய, மாணவர்களின் சிரிப்புச் சத்தத்தால் வகுப்பறையே அதிர்ந்தது. இதனால் அவமானத்திற்கு உள்ளான ஸ்டார் டெய்லி தன் வகுப்பாசிரியரிடம், “இதுதான் நீங்கள் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கும் கடைசிச் சிரிப்பு. ஒருநாள் வரும். அப்பொழுது நீங்கள் என்னைப் பார்த்து அஞ்சுவீர்கள்” என்று சொல்லிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினான். இதன்பிறகு அவன் எல்லாரும் அஞ்சி நடுங்கக்கூடிய அளவில் பெரிய கொலைகாரனாகவும் கொள்ளைக்காரனாகவும் ஆனான்.
ஸ்டார் டெய்லியின் வகுப்பாசிரியர் அவனிடம் இருந்த குறைபாட்டை அறிந்த பிறகு, அவனுக்கு முறையான பயிற்சி கொடுத்து, நல்லவற்றைக் கற்றுக்கொண்டு, அவனை நல்ல மாணவனாய் உருவாக்கி இருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு நடந்துகொள்ளாதது மிகக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தியது. இதற்கு முற்றிலும் மாறாக, இன்றைய முதல் வாசகத்தில், “பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்ல வேண்டிய வழியில் உன்னை வழிநடத்துபவரும் நானே! என்கிறார் ஆண்டவர். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தளவில் ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்கு ஓர் ஆயராக இருந்தது மட்டுமல்லாமல், ஓர் ஆசிரியராகவும் இருந்தார். அதனால்தான் “அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்” (எசா 54:13) என்ற நம்பிக்கை அவர்கள் நடுவில் இருந்தது. ஆண்டவர் கற்றுத்தருவார் எனில், மனிதரைப் போன்று தீயனவற்றைக் கற்றுத்தருபவர் அல்லர்; பயனுள்ளவற்றையே கற்றுத்தருபவர். ஆகையால், அப்படிப்பட்டவருடைய போதனைக்கு ஒருவர் செவிமடுக்கின்றார் எனில், அவர் நிறைவாழ்வு அடைவார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் கற்றுத் தந்ததற்குச் செவி மடுக்கவில்லை. அதனால் அவர்கள் அழிவிற்கு மேல் அழிவினைச் சந்தித்தார்கள்.
நற்செய்தியில் திருமுழுக்கு யோவானுடைய போதனைக்கும், இயேசுவின் போதனைக்கும் செவிமடுக்காமல், யூதர்கள் அவர்களைப் பேய்பிடித்தவன் என்றும், பெருந்தீனிக்காரன் என்றும் விமர்சிக்கின்றார்கள். இவ்வாறு அவர்கள் யாருக்கும் செவிமடுக்காமல், கடவுள்மீது நம்பிக்கை இல்லாமலேயே வாழ்ந்து வந்தார்கள். அறிவிக்கப்பட்டதைக் கேட்டால்தானே நம்பிக்கை ஏற்படும் (உரோ 10:17). யூதர்கள் கடவுள் கற்றுக்கொடுத்ததற்கும் செவி மடுக்கவில்லை; அவருடைய திருமகன் இயேசு கற்றுக் கொடுத்தற்கும் செவி மடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தங்கள் முடிவினைத் தாங்களே தேடிக்கொண்டார்கள்.
நாம், கடவுள் நமக்குப் பயனுள்ளவற்றைக் கற்பிக்கின்றபோது, அதற்குச் செவிமடுக்கின்றோமா? சிந்திப்போம்
Comments are closed.