இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

29.11.2023 (புதன்)

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

உத்ராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்குண்ட 41 தொழிலாளர்களையும் உயிருடன் பாதுகாப்பாக மீட்டு நமது அனைவரின் வேண்டுதல்களையும் செவிமடுத்த நம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,

“ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; ” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

ஆண்டவர் தூய ஆவியானவர் வழியாக சிறந்த ஞானத்தை நமக்குத் தந்தருள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தியில்,

“என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.” என இயேசு கூறியதை நாம் வாசித்தோம்.

மத உணர்வினைத் தூண்டிவிட்டு மக்களிடையே வன்மத்தைத் தூண்டுபவர்கள் மத்தியில் வாழும் நாம், இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற துணிவுடன் இருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

ஆன்மாக்களின் மாதமான இந்த நவம்பர் மாதம் முழுவதும் நமது இறந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களின் ஆன்மாக்களுக்காக நாம் விஷேசமாக திருப்பலி ஒப்புக்கொடுத்தல், செபமாலை செபித்தல், ஏழைகளுக்கு உணவு அளித்தல் ஆகியவற்றை அடிக்கடி செய்வதன் மூலம் உத்தரிய நிலையிலிருக்கும் ஆன்மாக்களை ஆண்டவரின் விண்ணக வீட்டிற்கு அனுப்பும் அற்புத பணியினை ஆவலுடன் செய்ய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை இன்று நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.