இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய முதல் வாசகத்தில், “காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன்.” என நமதாண்டவர் கூறுகிறார். நமது மந்தையிலிருந்து பிரிந்து போன ஆடுகளைக் கூட்டிச் சேர்கின்ற இறைப்பணியை நமது ஞான மேய்ப்பர்கள் தூய ஆவியின் வல்லமையோடு செயல்படுத்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவி “ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.” திருப்பாடல் (23:1). சங்கீதம் 23-ஐ வாசிக்கும் நம் நாவு ஒரு போதும் குறைகளை முணு முணுக்காமல் நிறைவுள்ள மனிதராக இறைவன் நமக்கு அளித்த வாழ்வில் மகிழ்ச்சி காண வேண்டும். இறைவன் விரும்பும் மன நிறைவுள்ள மனிதர்களாக நாம் வாழ்ந்து காட்டிட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தியில், “நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’.” என இயேசு கூறுகிறார்.
இயேசு கூறிய இவை அனைத்தையும் பெயர், புகழ் இவற்றிற்காக நாம் செய்யாமல் தூய இரக்க உள்ளத்தோடு மனமுவந்து செய்து, வர இருக்கும் கிறிஸ்து அரசரின் இறையாட்சியை உரிமைப் பேறாக்கிக் கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
ஆன்மாக்களின் மாதத்தில் விஷேசமாக உத்தரிய நிலையில் அவதியுரும் அனைத்து ஆன்மாக்களுக்காகவும் திருப்பலியில் வேண்டுவோம். நமது ஆழமான இடைவிடாத வேண்டுதல்கள் ஆன்மாக்களை நித்திய பேரின்பத்திற்கு கொண்டு செல்ல இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.