சைப்ரஸ் அரசு தலைவருடன் திருத்தந்தை சந்திப்பு

சைப்ரஸ் அரசு  தலைவர் நிகோஸ் கிறிஸ்டோடூலிடஸ் அவர்கள், நவம்பர் 24ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

இரு தலைவர்களுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது,  புனித பூமியில் இடம்பெற்றுவரும் போரைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இச்சந்திப்பு  சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது எனவும், வழக்கம் போல இருவரும் பரிசுகளை பரிமாறிக் கொண்டதில், திருத்தந்தை குடியரசு தலைவருக்கு தூய ஆவியாரின் பதக்கத்தையும், 2024 உலக அமைதி தினத்திற்கான செய்தியின் நகலையும் பரிசாக வழங்க, கிறிஸ்டோடூலிட்ஸ், ஓர் ஆலிவ் மரம், மற்றும் உலோகத்தாலான சிற்பத்தை திருத்தந்தைக்கு பரிசாக வழங்கியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையுடனான சந்திப்பினைத் தொடர்ந்து, கிறிஸ்டோடூலிடிஸ், திருப்பீடச் செயலர் பியெத்ரோ பரோலின், மாநிலங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான உறவுகளுக்கான பிரிவின் பலதரப்பு துறைக்கான துணைச் செயலர் டேனியல் பாச்சோ அவர்களையும் சந்தித்தார்.

மாநிலச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சுமூகமான கலந்துரையாடலின் போது,  இருதரப்பு உறவுகளுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, திருஅவை மற்றும் அரசு தரப்பு உறவுகள் தொடர்பான பல வெளிப்படையான கேள்விகள், மற்றும், புலம்பெயர்ந்தோர் பிரச்சினை,  அதன்பின், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் நிலவரங்கள் உட்பட, தற்போது நிலவி வரும் மோதல்கள், சர்வதேச நிலவரங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

Comments are closed.