நவம்பர் 25 : நற்செய்தி வாசகம்

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-40

அக்காலத்தில்

உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதிவைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.

இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.

மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றனர். அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————

கடவுள் நீதியுள்ள நடுவர்

I 1 மக்கபேயர் 6: 1-13

II லூக்கா 20: 27-40

“இதனால்தான் இந்தக் கேடுகள் எனக்கு வந்துற்றன”

நான் மிகப்பெரிய பாவி:

அறுவைச் சிகிச்சையின்போது, சிகிச்சை பெறும் நோயாளர் தன் உணர்வை இழக்க மருத்துவர்கள் பயன்படுத்தப்படும் ஒரு மருந்துதான் குளோரோபாம் (Chloroform). இந்த மருந்தைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் தாம்சன் என்ற அறிவியல் அறிஞர்.

ஒருமுறை ஒரு மாணவர் இவரிடம், “ஐயா! நீங்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பகளில், மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று எதைச் சொல்வீர்கள்?” என்றார். அதற்கு இவர் சிறிதும் தாமதியாமல், “நான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு, நான் மிகப்பெரிய பாவி. இயேசு என்னுடைய மீட்பர் என்பதுதான்” என்று பொறுமையாகப் பதில் சொன்னார்.

ஆம், ஜேம்ஸ் தாம்சன் பெரிய கண்டுபிடிப்பாளராக இருந்தாலும், தான் ஒரு மிகப்பெரிய பாவி என்று உணர்ந்தது நமது கவனத்திற்கு உரியது. இன்றைய முதல் வாசகத்தில் நான்காம் அந்தியோக்கு எப்பிபான் மன்னன் தான் ஒரு மிகப்பெரிய பாவி, அதனால்தான் தனக்கு இந்தக் கேடுகளெல்லாம் வந்துற்றன என்பதை உணர்கின்றான். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

அந்தியோக்கு எப்பிபான் மன்னன் முன்பு எருசலேம் திருக்கோயிலில் பாகால் தெய்வத்தின் சிலையை நிறுவி, எருசலேம் திருக்கோயிலைத் தீட்டுப்படுத்தினான். தவிர, அவன் அங்கிருந்த விலையுயர்ந்த பொருள்களையெல்லாம் கவர்ந்து வந்திருந்தான். இன்றைய முதல் வாசகத்தில், அவன் எலிமாய் நகரில் பொன், வெள்ளி இருக்கின்றது என்று கேள்விப்பட்டு அதைக் கவர்ந்திட விரைகின்றான்; ஆனால், அவனுடைய படை அங்கிருந்தவர்களால் முறியடிக்கப்படுகின்றது. இதற்கு நடுவில் யூதா நாட்டை எதிர்த்துச் சென்றிருந்த அவனுடைய படை முறியடிக்கப்படுகின்றது. இதையெல்லாம் நினைத்து அவன் கலங்கி, படுத்த படுக்கையாகிவிடுகின்றான்.

அப்பொழுதுதான் அவன் தன்னுடைய தவற்றை உணர்ந்து பார்க்கிறான். எருசலேமில் உள்ள ஆண்டவரின் திருக்கோயிலைத் தீட்டுப்படுத்தியதாலேயே தனக்கு இந்தக் கேடுகள் வந்துற்றன என்று நினைத்து அவன் வருந்துகின்றான். ஆம், எருசலேம் திருகோயிலில், இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பதுபோல வாழ்வோரின் கடவுள் குடிகொண்டிருந்தார். அப்படிப்பட்ட திருக்கோயிலை அந்தியோக்கு எப்பிபான் மன்னன் தீட்டுப்படுத்தியதாலேயே அவனுக்கு மிகப்பெரிய அழிவு வந்தது.

Comments are closed.