நவம்பர் 12 : நற்செய்தி வாசகம்
விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் மானிடமகன் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது
விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் மானிடமகன் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13
இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: “விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.
நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.
அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————————–
உள்ளே…! வெளியே…!
பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் ஞாயிறு
I சாலமோனின் ஞானம் 6: 12-16
II 1 தெசலோனிக்கர் 4: 13-18
III மத்தேயு 25: 1-13
உள்ளே…! வெளியே…!
நிகழ்வு
மீன் பிரியர் ஒருவர் இருந்தார். இவர் பகல் உணவோ இரவு உணவோ உண்ணும்பொழுது, தன் மேசையில் மீன் இல்லாமல் உண்ணவே மாட்டார். அதற்காகவே, இவர் தன்னுடைய பண்ணைவீட்டில் குளம் ஒன்றை அமைத்து, அதில் மீன்களை வளர்த்து வந்தார்.
ஒருநாள் இவர் அமைத்திருந்த மீன்குளத்தில் தாமரை மலர் ஒன்று மலர்ந்திருந்தது. அதைப் பார்த்ததும் இவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஏனென்றால், இவருக்குத் தாமரை மலர் பிடிக்கும். ஆனாலும் தாமரைச் செடி மெல்ல வளர்ந்து, குளத்தை நிறைத்துவிட்டால், அது தான் வளர்க்கும் மீன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இவர் எண்ணினார். இதனால் இவர் தனக்கு மீன் குளத்தை அமைத்துத் தந்தவரிடம் “குளத்தில் வளர்ந்திருக்கும் தாமரைச் செடியை அகற்றலாமா? வேண்டாமா?” என்றார். அவரோ, “மீன் குளத்தில் தாமரைச் செடி வளர்வது பிரச்சனை இல்லைதான்; ஆனால், அதை இரண்டு ஆண்டுகளுக்குள் அகற்றிவிடவேண்டும். இல்லையென்றால், அது அப்படியே வளர்ந்து ஒரு கட்டத்தில் குளத்தையே நிறைத்து, குளத்தில் இருக்கும் மீன்களைச் சாகடித்துவிடும்” என்றார்.
அந்த மனிதர் சொன்னதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, குளத்திலிருந்து கிடைத்த மீன்களை உண்டு, அதில் வளர்ந்து வந்த தாமரை மலர்களை இவர் இரசித்துக்கொண்டே வந்தார். நாள்கள் வேகமாக உருண்டோடத் தொடங்கியபொழுது, மீன் குளத்தில் தாமரைச் செடிகளின் எண்ணிக்கை பெருகியது. ஓராண்டிற்குள் தாமரைச் செடிகள் பாதிக் குளத்தை நிறைத்திருந்தன. இதைப் பார்த்துவிட்டு இவர், ‘தாமரைச் செடிகள் பாதிக் குளத்தைத்தானே நிறைத்திருக்கின்றன! இன்னும் ஓராண்டு இருக்கின்றதல்லவா…! அதற்குள் இவற்றையெல்லாம் அகற்றிவிடலாம்” என்று நினைத்துகொண்டார்.
இரண்டாமாண்டு முடியப் போகும் கடைசி நாள் வந்தது. அன்றைக்கு இவர் மீன் குளத்தைப் பார்த்தபொழுது, கடந்த ஆண்டு இருந்த தாமரைச் செடிகள்தான் அப்படியே இருந்தன. இதனால் இவர் ‘நாளைய நாளில் குளத்தில் இருக்கும் தாமரைச் செடிகளை வெட்டிக்கொள்ளலாம்’ என்று நினைத்துக்கொண்டுத் தூங்கப் போனார். மறுநாள் காலையில் இவர் மீன் குளத்தைப் பார்த்தபொழுது, குளம் முழுவதும் தாமரைச் செடிகள் நிறைந்து, அதில் இருந்த மீன்களெல்லாம் செத்து மிதந்துகொண்டிருந்தன. அக்காட்சியைக் கண்டு இவர், “இந்தக் மீன்குளத்தை அமைத்துத் தந்தவர் சொன்னதுபோன்று, இந்தக் குளத்தில் இருந்த தாமரைச் செடிகளை இரண்டு ஆண்டுகளுக்குள்ளே அகற்றியிருந்தால், இப்படியெல்லாம் தடந்திருக்காதே! என்று தன்னையே நொந்துகொண்டார்.
இந்த மனிதரைப் போன்றுதான் பலர் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் முன்மதியில்லாமல் நடந்து, பலவற்றையும் இழந்து நிற்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை முன்மதியோடு நடந்துகொள்கின்ற ஒருவர் விண்ணரசில் பங்குபெறுவார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மணமகனும் பத்துத் தோழியரும்
ஏறக்குறைய நாம் பொதுக்காலத்தின் நிறைவுப் பகுதியை அடைந்திருக்கின்றோம். அதனால் நாம் வாசிக்கின்ற இறைவாக்குப் பகுதிகள் மானிட மகனுடைய வருகையைப் பற்றியும், அவருடைய வருகைக்காக நாம் எப்படியெல்லாம் தயாராய் இருப்பது பற்றியும் எடுத்துக் கூறுபவையாக இருக்கின்றன. அந்த அடிப்படையில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு விண்ணரசை மணமகனை எதிர்கொள்ளும் பத்துத் தோழியருக்குக் ஒப்பிடுகின்றனர். இந்த உவமையில் வருகின்ற மணமகன் – இயேசு; பத்துத் தோழியர் – அவர்களுடைய சீடர்களாகிய நாம்.
Comments are closed.