நவம்பர் 11 : நற்செய்தி வாசகம்
யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?
நவம்பர் 11 : நற்செய்தி வாசகம்
யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?
எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.”
பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர். அவர் அவர்களிடம் கூறியது: “நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக்கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————
பேராசை பிடித்த மனிதன்
பொதுக்காலம் முப்பத்து ஒன்றாம் வாரம் சனிக்கிழமை
I உரோமையர் 16: 3-9, 16, 22-27
II லூக்கா 16: 9-15
எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது
பேராசை பிடித்த மனிதன்
‘என்னிடம் மட்டும் மிகுதியான பணமும் நேரமும் திறமையும் இருந்தால், நான் அவற்றைப் பிறருடைய வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவேன். இப்போது என்னுடைய தேவைக்கு மட்டுமே பணமும் நேரமும் திறமையும் இருப்பதால், நான் அவற்றை என்னுடைய வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றேன். இந்த நிலை எப்போது மாறுமோ?’ என்று ஒருவன் புலம்பிக் கொண்டே இருந்தான்.
ஒருநாள் அவனுக்கு முன் கடவுள் தோன்றினார். “நீ கேட்டுக் கொண்டதற்கேற்ப உனக்கு நான் மிகுதியான பணமும் நேரமும் திறமையும் தருகிறேன். அவற்றை நீ பிறருடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்து” என்று சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து மறைந்தார். தான் கேட்டுக்கொண்டது போலவே, தன்னிடத்தில் மிகுதியான பணமும் நேரமும் திறமையும் வந்துவிட்டதை எண்ணி அந்த மனிதன் மகிழ்ந்தான். அதே நேரத்தில் அவன் அவற்றைப் பிறருடைய வளர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல், இன்னும் மிகுதியாகப் பணமும் நேரமும் திறமையும் இருந்தால், அவற்றைப் பிறருடைய வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவேனே’ என்று வழக்கம்போல் புலம்பினான்.
இதைக்கேட்டுக் கடவுள் வருந்தினார். அதனால் அவர் அவனிடம் கொடுத்த யாவற்றையும் திரும்ப எடுத்துக்கொண்டார். இப்போது அந்த மனிதன், “கடவுளே! நீர் என்னிடமிருந்து எடுத்துக்கொண்டவற்றைத் திரும்பத் தந்தால், அவற்றை நான் பிறருடைய வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவேன்” என்றான். அதற்குக் கடவுள் அவனிடம், “உன்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் உனக்கு நான் எதையும் கொடுப்பதாய் இல்லை” என்று சொல்லிவிட்டார். இதற்குப் பிறகு அந்த மனிதன் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம், கடவுள் ஒருவர் இல்லவே இல்லை. அவரிடம் வேண்டுவது வீண் என்று சொல்லித் திரிந்தான்.
பலரும் இந்தக் கதையில் வரும் மனிதனைப் போன்று இருப்பதில் நிறைவு கொள்ளாமல், வேண்டும் வேண்டும் என்று பணத்திற்காகப் பேயாய் அலைவதைக் காண முடிகின்றது. இதனால்தான் இயேசு இன்றைய நற்செய்தியில், எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள், ‘பணம் படைத்தவர்கள் கடவுளால் ஆசி பெற்றவர்கள், பணமில்லாத ஏழைகள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள்’ என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வந்தார்கள். இதனால் அவர் பணத்தைக் குறுக்கு வழியில் சம்பாதித்தார்கள் (மாற் 12: 40). இவ்வாறு அவர்கள் ஒரே நேரத்தில் பணத்தாசை பிடித்தவர்களாகவும், கடவுளுக்குப் பணிவிடை செய்பவர்களாகவும் இருந்தார்கள்.
பணத்தாசை பிடித்து வாழும் ஒருவரால் கடவுளுக்குப் பணிவிடை செய்ய முடியாது என்பது இயேசுவின் ஆழமான நம்பிக்கை. அதனால் அவர் எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது என்கிறார். அப்படியானால் பணக்காரர்களால் கடவுளுக்குப் பணிவிடை செய்ய முடியாதா? என்ற கேள்வி எழலாம். பணக்காரர்களால் கடவுளுக்குப் பணிவிடை செய்ய முடியும், எப்போது எனில், அவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை பிறருக்குக் கொடுக்க முன் வருகின்றபோது!
எனவே, நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பணம் உட்பட எல்லா ஆசிகளையும் அவருக்காகவும் அவருடைய மக்களுக்காகவும் பயன்படுத்தி அவருக்கு உண்மையாய்ப் பணிவிடை செய்வோம்
Comments are closed.