உக்ரைனிய குழந்தைக்கு திருமுழுக்கு வழங்கிய திருத்தந்தை

உக்ரேனிய பெற்றோரின் பத்து குழந்தைகளில் இளையவரான Zakhariy என்ற மூன்று மாத உக்ரேனியக் குழந்தைக்குத் தனது சாந்தா மார்த்தா இல்லத்திலுள்ள ஆலயத்தில் நிகழ்ந்த ஒரு வழிபாட்டின்போது திருமுழுக்கு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 6, இத்திங்களன்று மாலையில் இந்நிகழ்வு நடைபெற்றது என்றும், மிகவும் நெருக்கடியான  காலகட்டத்தில் இறையருளால் நிரம்பிய மகிழ்ச்சியான தருணமாக இது அமைந்திருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் Neocatechumenal Way என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அண்மைய ஆண்டுகளில் அவர்கள் பல குடும்ப சிரமங்களுக்கு மத்தியில் கடவுளின் பாதுகாப்பை அனுபவித்து வந்ததாகவும், இந்நிலை இரஷ்ய படையெடுப்பால் மேலும் மோசமடைந்தது என்றும் தெரிவித்துள்ளனர் இப்பெற்றோர்.

கடவுள் எப்போதும் எங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதால், நாங்கள் கடவுளுக்கு நன்றி கூர்வதாகக்  கூறிய அக்குழந்தையின் தாய் Vita, உக்ரைன் நாட்டில் போர் நடைபெற்று வருவதாகவும், இது கடினமானச் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரவும், சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் விரைவில் இல்லம் திரும்பவும், இனி படுகொலைகள் நிகழாவண்ணம் இருக்கவும் தாங்கள் தொடர்ந்து இறைவேண்டல் செய்து வருவதாகவும் கூறியுள்ளார் Vita.

எங்கள் குடும்பத்திற்கு இந்தத் திருமுழுக்கு மிகப்பெரிய கொடை எனவும்,  நாங்கள் திருத்தந்தையைச் சந்திக்க முடியும் என்பது மட்டுமன்றி, எங்கள் மகனுக்குத் திருத்தந்தை இந்தத் திருமுழுக்கை வழங்குவார் என்று நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்றும் கூறிய Vita, இது கடவுளால் மட்டுமே நிகழ்ந்துள்ள மிகவும் வியப்புக்குரிய மறைபொருள் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.