இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவை இன்று கொண்டாடும் நாம், இன்றைய முதல் வாசகத்தில் “கோவிலிலிருந்து வரும் தண்ணீர் பாயும் இடத்தில் உயிர்கள் வாழும்; பலவகையான மரங்கள் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; கனிகள் குறையா” (எசே 47:9,12) என்று வாசிக்கின்றோம்.

ஆம், இறைவனின் ஆலயம் நமக்கு உயிர் வாழ்வதற்கான ஆற்றலையும், வல்லமையையும் தரும் பிறப்பிடமாக இருக்கின்றது.

நெருக்கடி நேரங்களில் நமக்கு ஆற்றலும், வல்லமையும் தரக்கூடிய நாம் செல்ல வேண்டிய இடம் ஆலயம்தான் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றைய நற்செய்தி வாசகத்தில், “ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.” என வாசித்தோம்.

நம் உடலாகிய ஆலயத்தில் தூய ஆவியானவர் வாசம் செய்வதால் அவ்வாலயத்தை நாம் தூயதாக வைத்திருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

இதுவரை இவ்வுலகில் நடந்த எண்ணற்ற போர்களில் இறந்த போர் வீரர்கள், அப்பாவி பொது மக்கள் ஆகியோரின் ஆன்மாக்கள் நித்திய இளைப்பாற்றியை அடைய வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும் இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.