நவம்பர் 10 : நற்செய்தி வாசகம் ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.
ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8
இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.
தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.
அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————————————
“முன்மதியுள்ளவர்களாய் நடங்கள்”
பொதுக்காலம் முப்பத்து ஒன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை
I உரோமையர் 15: 14-21
II லூக்கா 16: 1-8
“முன்மதியுள்ளவர்களாய் நடங்கள்”
முன்மதியுள்ள தாய்:
ஒரு சிற்றூரில், தெருக்களில் எப்போதும் வண்டியை வேகமாக ஓட்டுச் செல்லும் இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவனுடைய அலைபேசிக்கு புதிய எண்ணிலிருந்து ஓர் அழைப்பு வந்தது.
அதை எடுத்து அவன் பேசியபோது, மறுமுனையிலிருந்து பேசிய ஒரு பெண் அவனிடம், “இன்று நீ வண்டியில் வெளியே எங்காவது போகிறாயா?” என்றார். “இன்று நான் வெளியே எங்கேயும் போகவில்லை” என்று பதிலளித்த அந்த இளைஞன், “ஆமாம், நீங்கள் யார், எதற்காக இக்கேள்வியை என்னிடத்தில் கேட்கிறீர்கள்?” என்றான்.
அதற்கு அந்தப் பெண்மணி, “நான் யார் என்பது முக்கியமில்லை. இன்று என்னுடைய மகளைக் காய்கறிகள் வாங்கக் கடைக்கு அனுப்பலாம் என்று இருக்கின்றேன். நீ வண்டியில் வெளியே செல்லவில்லை என்றால், என்னுடைய மகளைத் துணிவோடு காய்கறிகள் வாங்கி வர அனுப்பலாம் அல்லவா! அதனால்தான் கேட்டேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
வேடிக்கையான ஒரு நிகழ்வாக இருந்தாலும், தன் மகளைக் கடைக்கு அனுப்ப நினைத்த அந்தத் தாய், அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று முன்மதியோடு செயல்பட்டது நமது சிந்தனைக்குரியது. இன்றைய இறைவார்த்தை நாம் முன்மதியோடு நடந்துகொள்ள அழைப்புத் தருகின்றது. நாம் எப்படி முன்மதியோடு நடந்து கொள்வது என்பது குறித்து இப்போது சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “நீங்கள் எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாய் இருக்கிறீர்கள்” என்கிறார். ‘எல்லா அறிவு’ என்று பவுல் சொல்வதை, முன்மதியோடு நடப்பது என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
நற்செய்தியில் இயேசு முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளரைப் பற்றிய உவமையைச் சொல்கிறார். வீட்டுப் பொறுப்பாளர் தன் தலைவருக்கு நம்பிக்கைக்குரியவராய் இருந்திருக்க வேண்டும்; ஆனால், அவர் அவ்வாறு இல்லாமல், தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பில் முறைகேடாக நடந்து கொள்கின்றார். இதனால் அவருடைய தவறு அவருடைய தலைவருக்குத் தெரியவர, அவர் அந்த நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளரை பணியிலிருந்து நீக்கிவிட முடிவு செய்கிறார். அப்பொழுது வீட்டுப் பொறுப்பாளர் தனது எதிர்கால வாழ்விற்கு என்ன செய்யலாம் என்பதைக் குறித்து முன்மதியோடு செயல்படுகின்றார். இதற்காக அவரது தலைவர் அவரைப் பாராட்டுகின்றார்.
ஆண்டவர் இயேசு இந்த உவமையின் மூலம், நாம் வீட்டுத் தலைவரைப் போன்றோ அல்லது வீட்டுப் பொறுப்பாளரரைப் போன்றோ இருக்க வேண்டும் என்று சொல்ல வில்லை. ஏனெனில், இருவரும் ஒருவகையில் நேர்மையற்றவர்கள்தான். மாறாக, இவ்வுலக மக்களே முன்மதியோடு நடந்துகொள்ளும்போது, ஒளியின் மக்கள் கட்டாயம் முன்மதியோடு நடக்க வேண்டும் என்ற செய்தியைத்தான் இயேசு சொல்ல வருகின்றார். ஆகையால், நமது அன்றாட வாழ்வில் முன்மதியோடு நடக்க முயற்சி செய்வோம்.
Comments are closed.