நவம்பர் 9 : நற்செய்தி வாசகம்
தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.
நவம்பர் 9 : நற்செய்தி வாசகம்
தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-22
யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்.
அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், “உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்” என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்கள்.
யூதர்கள் அவரைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்றார். அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?” என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.
அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட போது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————————–
மறையுரைச் சிந்தனை
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு
நவம்பர் 09
“ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே,
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே”
இன்று அன்னையாம் திருச்சபை எல்லா ஆலயங்களுக்கும் தாய் ஆலயமாக இருக்கக்கூடிய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஒவ்வொரு ஆயருக்கும் ஒரு பேராலயம் பொறுப்பில் இருக்கும். அந்த விதத்தில் பார்க்கும்போது உரோமை நகரின் ஆயராக இருக்கக்கூடிய திருத்தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பேராலயம்தான் இந்த இலாத்தரன் பேராலயம்.
தொடக்கத் திருச்சபையில் கிறிஸ்தவர்கள் உரோமை அரசாங்கத்தால் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டார்கள். எனவே கிறிஸ்தவர்கள் உரோமையர்களுக்குப் பயந்து இல்லங்களில் தங்களுடைய வழிபாடுகளைச் செய்துவந்தார்கள். அவர்களுக்கு என்று ஆலயங்கள் கிடையாது. என்றைக்கு உரோமையை ஆண்ட கான்ஸ்டாண்டிநோபுள் என்ற மன்னன் கிறிஸ்தவ மதத்தை தன்னுடைய தேசத்தின் மதமாக அறிவித்தானோ அன்றைக்கு ஆலயங்கள் பெருகத் தொடங்கியன. கான்ஸ்டாண்டிநோபுள் தான் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதன் நிமித்தமாக தன்னுடைய அரண்மனையையே ஆலயமாகப் பயன்படுத்தத் தந்தான். அப்படி வந்ததுதான் இந்த இலாத்தரன் பேராலயம்.
இப்பேராலயம் 324 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி நேர்ந்தளிக்கப்பட்து. தொடக்கத்தில் இப்பேராலயம் உலக மீட்பருக்கும், பின்னர் திருமுழுக்கு யோவானுக்கும், அதன்பின்னர் நற்செய்தியாளரான தூய யோவானுக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பேராலயம் நேர்ந்தளிக்கப்பட்ட நாளிலிருந்து ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் திருந்தந்தையர்கள் அங்கேதான் தங்கியிருந்தார்கள். ஒருசில குழப்பங்களின் காரணமாக சில காலம் அவிஞ்னோன் என்ற இடத்தில் திருத்தந்தையர்கள் தங்க நேர்ந்தது. திருத்தந்தை பதினோராம் கிரஹோரியின் காலத்தில் அந்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து, உரோமை நகருக்கு அவர் வந்தபோது அங்கே இலாத்தரன் பேராலயம் சேதமடைந்திருப்பதைக் கண்டார். எனவே அவர் பேராலயத்தைப் புதுப்பிக்கத் தொடங்கினார். அதன்பிறகு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் என்பவர் இப்போது உள்ள வடிவத்தைக் கொண்டுவந்து நேர்ந்தளித்தார்.
இன்னும் ஒருசில காரணங்களால் இலாத்தரன் பேராலயம் மேலும் சிறப்புப் பெறுவதாக இருக்கின்றது. குறிப்பாக ஆண்டவர் இயேசு தன்னுடைய இறுதி இராவுணவின்போது உண்ணப் பயன்படுத்திய மேசை இங்கேதான் இருக்கின்றது. அதேபோன்று திருத்தூதரான தூய பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பலிபீடம் இங்கேதான் இருக்கின்றது. இப்படி பல்வேறுபட்ட சிறப்புகளைக் கொண்டதால் இப்பேராலயம் “பொன் ஆலயம் – Golden Church” என்று அழைக்கப்படுகின்றது.
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
பொதுவாக ஆலயம் என்று சொன்னால் (ஆ)ன்மாக்கள், ஆண்டவனில் (லயிக்க)க்கூடிய இடம் என்று சொல்வார்கள். இது உண்மை. ஆலயத்தில்தான் இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே ஒரு நல்லுறவு ஏற்படுகின்றது. அங்கேதான் மனிதன் தன்னுடைய கவலையை மறந்து, அமைதியில் இளைப்பாறுகிறான். ஏனென்றால் ஆலயம் ஆண்டவரின் அருளும், இரக்கமும் பொங்கி வழியும் ஓர் இல்லிடமாக விளங்குகின்றது.
இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், கோவிலிலிருந்து வரும் தண்ணீர் பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும், அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில், இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். அது பாயுமிடமெல்லாம் உயிர் வாழும்” என்று படிக்கின்றோம். கோவிலிருந்து வரும் தண்ணீரை கடவுளின் அருளாக நாம் புரிந்துகொள்ளலாம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தை ‘தந்தையின் இல்லம்’ என்று அழைக்கின்றார். அதனால்தான் அவ்வாலயத்தில் வாணிபம் செய்தவர்களை எல்லாம் அவர் விரட்டி அடிக்கின்றார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் ஆலயத்தின் மதிப்பையும், பெருமையும் உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் ஆலயம்தான் நம்முடைய வாழ்வில் ஆற்றலின் ஊற்று.
Comments are closed.