நவம்பர் 4 : நற்செய்தி வாசகம்

தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.

தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1, 7-11

அக்காலத்தில்

ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்துகொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:

“ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும் பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.

தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————–

“தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்”

பொதுக்காலம் முப்பதாம் வாரம் சனிக்கிழமை

I உரோமையர் 11: 1-2, 11-12, 25-29

II லூக்கா 14: 1, 7-11

“தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்”

தன் முனைப்பினால் மாட்டிக்கொண்ட அரசி:

சிலருக்குத் தாம் யார் என்பதை மற்றவர்களிடம் காட்டிக்கொள்வதில் அவ்வளவு ஆசை இருக்கும். இந்த ஆசையை அல்லது விருப்பத்தை அவர்கள் தாங்கள் உடுத்தும் ஆடைகள், நகைகள், பயன்படுத்தும் இன்னபிற பொருள்கள் இப்படி ஏதாவது ஒன்றின்மூலமாக வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

பதினெட்டாம் நாட்டில் பிரான்ஸ் நாட்டை ஆண்ட மரிய அந்தோநெட் ((Marie Antoinette) என்ற அரசிக்கு விலையுயர்ந்த, அதே நேரத்தில் அரிதாகக் கிடைக்கும் நறுமணத் தைலத்தைப் பூசிக் கொள்வதில் கொள்ளை விருப்பம். இந்த நறுமணத் தைலத்தை கொண்டே இது அரசி பயன்படுத்தும் நறுமணத் தைலம் மக்கள் கண்டுகொள்வார்கள்.

1791 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் புரட்சி வெடித்தபோது, கலகக்காரர்களால் இவருக்கும் இவருடைய குடும்பத்தாருக்கும் ஆபத்து வரப்போவது தெரிந்தது. அதனால் இவரும் இவருடைய குடும்பத்தாரும் சாதாரண மனிதர்களைப் போன்று மாறுவேடம் பூண்டு பிரான்ஸ் நாட்டிலிருந்து தப்பிக்க முயன்றார்கள்; ஆனால், எதிர்பாராதவிதமாகக் இவர்கள் கலகக்காரர்களிடம் மாட்டிக்கொண்டார்கள்.

மரிய அந்தோநெட்டும் அவருடைய குடும்பத்தாரும் சாதாரண மனிதர்களைப் போன்று மாறுவேடத்தில் இருந்தபோதும் கலகக்காரர்களிடம் மாட்டிக்கொண்டதற்கு அவர் பயன்படுத்திய நறுமணத் தைலம்தான் காரணம். ஆம், மரிய அந்தோநெட் பிரான்சிலிருந்து தப்பிக்க முயன்ற அன்றும்கூட தான் பயன்படுத்தும் அந்த விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைப் பயன்படுத்தி இருந்தார். அதுவே அவர் யாரெனக் கலகக்காரர்களிடம் காட்டிக்கொடுத்துவிட்டது.

வேடிக்கையான நிகழ்வாக இருந்தாலும், ஒருவர் தன் முனைப்பைக் காட்டுகின்றபொழுது அல்லது ‘நான் பெரியவன்’ என்று மற்றவர்களிடம் காட்ட முற்படும்போது இது போன்ற ஆபத்துகள் நிகழலாம் என்ற உண்மையை உணர்த்துகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, மேன்மை அடையத் தாழ்ச்சியே வழி என்ற உண்மையை உரக்கச் சொல்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

விருந்துக்குச் செல்கின்றவர்கள் முதன்மையான இடங்களைப் பிடிப்பதற்கு முண்டியடிப்பர். இந்த வழக்கம் இன்று, நேற்று மட்டுமல்ல, இயேசுவின் காலத்திலிருந்தே; ஏன் அதற்கு முன்பே இருந்தது. விருந்துகளில் மக்கள் முதன்மையான இடங்களைப் பிடிப்பதற்கு ஒரு காரணம், மற்றவர்கள் முன் தாங்கள் பெரியவர்கள் எனக் காட்டிக்கொள்வதற்குத்தான்.

உலக வழக்கம் இப்படி இருக்கையில், ஆண்டவர் இயேசு, ஒருவர் உங்களை விருந்துக்கு அழைத்தால், முதன்மையான இடத்தில் அல்ல, கடைசி இடத்தில் போய் அமர்ந்துகொள்ளுங்கள். இவ்வாறு தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் என்று மக்களுக்குக் கற்பிக்கின்றார். விருந்தில் கடைசியான இடத்தில் அல்லது யாரும் விரும்பாத இடத்தில் அமர்வது கடினமான செயல்தான். ஆனால், இந்த இடத்தைத் தேர்ந்தெடுப்போரோ (சில நேரங்களில்) எல்லார் முன்பாக உயர்த்தப்படுகின்றார். இன்றைய முதல் வாசகம், யூதர்கள் தான் என்ற ஆணவத்தில் ஆடியதால் அழிவினைச் சந்தித்ததையும், பிற இனத்தவர் எல்லா வல்ல கடவுளுக்கு முன்பாகத் தாங்கள் ஒன்றுமில்லை என்று உணர்ந்ததால் கடவுளின் அருளைப் பெற்றுக்கொண்டதையும் குறித்துக் கூறுகின்றது.

ஆகையால், ஆணவம் அல்ல, தாழ்ச்சியே நம்மை உயர்த்தும் என்பதை உணர்ந்தவர்களாய் நாம் தாழ்ச்சியோடு வாழப் பழகுவோம்.

இறைவாக்கு:

 கடவுளுக்கு முன்பு நான் ஒன்றுமில்லை என்று உணர்வதே தாழ்ச்சி

 தாழ்ச்சியுடையோர் வீழ்ச்சி அடையார்

 ஆணவம் வரும் முன்னே, அழிவு வரும் பின்னே

சிந்தனைக்கு:

‘தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்’ (சீஞா 35:17) என்கிறது சீராக்கின் ஞான நூல். ஆகையால், நாம் தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.