திருத்தந்தையை சந்தித்தார் பஹ்ரைன் மன்னர்

வத்திக்கானுக்குச் சென்ற பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் இசா அல் கலீஃபாவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வரவேற்றார் என்றும், அதன்பிறகு இரு தலைவர்களும் அளவளாவி உரையாடி மகிழ்ந்தனர் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவிக்கின்றது.

ஏறத்தாழ 35 நிமிடங்கள் தொடர்ந்த இந்தச் சந்திப்பின்போது, நவம்பர் 2022-இல் திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்ட பஹ்ரைன் திருத்தூதுப் பயணத்தை நினைவு கூர்ந்து உரையாடி மகிழ்ந்தனர் என்றும் அச்செய்திக் குறிப்புக் கூறுகின்றது.

இச்சந்திப்பின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை இல்லத்தின் பதக்கங்கள், வெண்கலத்தில் ஆலிவ் கிளைச் சிற்பம், இந்த ஆண்டு உலக அமைதி நாள் செய்தி, மனித உடன்பிறந்த உறவுநிலைக் குறித்த ஆவணம் மற்றும் 27 மார்ச் 2020 இன் ஸ்டேடியோ ஆர்பிஸ் புத்தகம் ஆகியவற்றை பஹ்ரைன் மன்னருக்குப் பரிசாக வழங்கினார் என்றும், பதிலாக பஹ்ரைன் மன்னர், சில நறுமணங்களைக் கொண்ட கடிகாரத்துடன் கூடிய படிகக் குவளை, கடந்த ஆண்டு திருத்தந்தை  பஹ்ரைன் திருத்தூதுப் பயணம் குறித்த புகைப்படத் தொகுதி மற்றும் பஹ்ரைனில் புதிய பேராலயம் கட்டுவது குறித்த புத்தகம் ஆகியவற்றை திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கினார் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 3 முதல் 6 வரை அந்நாட்டிற்குத் திருத்தூதுப் பயணமாகச் சென்றிருந்தார். பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் இசா அல் கலீஃபா மற்றும் தலத்திருஅவைத் தலைவர்களின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  “பஹ்ரைன் உரையாடலுக்கான மன்றம்: மனித சகவாழ்வுக்கான கிழக்கு மற்றும் மேற்கு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்நாட்டின் சிறிய மந்தையாக விளங்கும் கத்தோலிக்கர்களையும் சந்தித்தார்.

‘உலகினில் நல்மனம் கொண்டோருக்கு அமைதி உரித்தாகுக!’ என்ற விருதுவாக்கின் அடிப்படையில் அவரின் இந்தத் திருத்தூதுப் பயணம் அமைந்திருந்தது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.