அக்டோபர் 19 : நற்செய்தி வாசகம்

ஆபேலின் இரத்தம் முதல் சக்கரியாவின் இரத்தம் வரை, இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகக் கணக்குக் கேட்கப்படும்

ஆபேலின் இரத்தம் முதல் சக்கரியாவின் இரத்தம் வரை, இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகக் கணக்குக் கேட்கப்படும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 47-54

அக்காலத்தில்

இயேசு கூறியது: “ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே. உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள்.

இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது: நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள். ஆபேலின் இரத்தம் முதல், பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரியாவின் இரத்தம் வரை, உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.

ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்.” இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமை உணர்வு மிகுந்தவராய் அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————————————

“கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்”

பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம் வியாழக்கிழமை

I உரோமையர் 3: 21-30

II லூக்கா 11: 47-54

“கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்”

கடவுளுக்கு ஏற்புடையவராக என்ன செய்யவேண்டும்?

‘மறையுரையாளர்களின் இளவரசர்’ (Prince of Preachers) என அழைக்கப்படுபவர், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் ஸ்பெர்ஜன். ஒருநாள் இவர் ஒரு கோயிலில் “ஒவ்வொருவரும் கடவுளுடைய அருளாலேயே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆகிறார்கள்” என்று போதித்துவிட்டு வெளியே வந்தார்.

அப்பொழுது அவரிடத்தில் வந்த இளைஞர் ஒருவர், “ஐயா! வழிதவறி அலைந்த நான், என்னுடைய பாவத்தை உணர்ந்து, கடவுளிடம் திரும்பி வந்திருக்கின்றேன். இப்பொழுது நான் என்ன செய்தால், கடவுளுக்கு ஏற்புடையவன் ஆக முடியும்?” என்றான். “கடவுளுக்கு ஏற்புடையவனாக நீ எதுவும் செய்யத் தேவையில்லை” என்று அந்த இளைஞனிடம் பேச்சைத் தொடங்கிய சார்லஸ் ஸ்பெர்ஜன், “ஒருவேளை நீ கடவுளுக்கு ஏற்புடையவனாகிய எதையாவது செய்தால், கடவுள் அதை உன்னுடைய முகத்தில் தூக்கி எறிந்துவிட்டு, ‘உன்னால் எனக்கு ஏற்புடையவனாக முடியாது’ என்பார். ஏனெனில், ஒவ்வொருவரும் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்குக் ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்” என்றார் (The Speaker’s Quote Book – Roy B.Zuck)

ஆம், நாம் ஒவ்வொருவரும் நமது சொந்த ஆற்றலால் அல்ல, கடவுளுடைய அருளாலேயே இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றோம். இதையே இன்றைய முதல் வாசகம் நமக்கு உணர்த்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

“இயேசு கிறிஸ்துமீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள், மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்” என்று சொல்லும் பவுல், “ஆயினும், அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம், கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றார்கள்” என்கிறார்.

பவுல் கூறும் இவ்வார்த்தைகள் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று, ஒவ்வொருவரும் நம்பிக்கையினால், அதுவும் இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பினால் கடவுளுக்கு உகந்தவராக இருக்கமுடியும் (எபி 11:6) இரண்டு, தங்கள் இயலாமையினால் மனிதர்கள் பாவம் செய்ய நேர்ந்ததால், இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயல் மூலம், கடவுளுடைய அருளால், இலவசமாய், அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர். எனவே, மனிதர்கள் தங்கள் சொந்த ஆற்றலால் அல்ல, ஆண்டவருடைய அருளாலேயே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆகமுடியும். அதற்கு நாம் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளவேண்டும். நாம் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை வைத்து வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

Comments are closed.