கடவுளின் கனவுகளோடு உங்கள் கனவுகளை ஒப்பிடுங்கள்

கடவுள் கொண்டிருக்கும் பெரிய கனவுகளை நாமும் கொண்டிருப்பது முக்கியம் என்றும், நம் கனவுச்சுடர்களை அணைக்காது தூண்டிவிடும் பெரியவர்களைச் சந்திப்பது அக்கனவுகளை நனவாக்க உதவுகிறது என்றும், நம் கனவுகளை எப்போதும் கடவுளின் கனவுகளுடன் ஒப்பிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை  பிரான்சிஸ்.

அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய நாள்களில் வடஇத்தாலியின் மிலானில் உள்ள புனித கார்லோ கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு  குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடுமையான சமூக மற்றும் காலநிலை நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் சேர்ந்து, உலகை மாற்றுவதற்கு எவ்வாறு பங்களிப்பது பற்றி சிந்தித்து செயலாற்றிகொண்டிருக்கும் மாணவர்களின் கனவு நனவாகும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

சிறந்த ஆற்றல்களையும், பயன்படுத்த வேண்டிய திறமைகளையும் வெளிப்படுத்த இயேசு மனிதனை உள்ளிருந்து மாற்றுகிறார் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது வளர்ச்சியை மனதில் வைத்து முழு நம்பிக்கையுடன் இயேசுவைப் பின்தொடரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நமது வளர்ச்சி என்பது மற்றவர்களை விட நம்மை உயர்வாகக் கருதுவதில் அல்ல, மாறாக மற்றவர்களுக்கானப் பணியில் நம்மைத் தாழ்த்துவதே நமது உண்மையான வளர்ச்சி என்றுக் கருதவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.