இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றைய ஞாயிறு திருப்பலி முதல் வாசகத்தில், “ஆண்டவர் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்.” என எசாயா இறைவாக்கினர் உரைக்கிறார்.

விண்ணகத் தந்தையின் விண்ணக விருந்திற்கு நம்மையே நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடலில்,

” உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.” என திருப்பாடல் 23:6-ல் திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

நித்திய பேரின்ப வீட்டை நமக்காக விண்ணகத்தில் கட்டியிருக்கும் நம் தேவனுக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி இரண்டாம் வாசகத்தில், “எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்.” என புனித பவுலடியார் கூறுகிறார்.

எந்த நிலையிலும், எந்த சூழலிலும் வளைந்து கொடுக்கும் மனநிலையைக் கொண்ட புனித பவுலைப் போல நாமும் நமது வாழ்வில் வாழ்ந்து காட்டிட இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

இன்றைய புனிதரான தூய அவிலா தெரசாவிடம் இருந்து “இயேசுவுக்காகத் துன்பங்களைப் பொறுமையோடு ஏற்றல்’ என்ற உயரிய பண்பினை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.