அக்டோபர் 16 : நற்செய்தி வாசகம்

யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில்

மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: “இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————–

“நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாக இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்”

பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம் திங்கட்கிழமை

I உரோமையர் 1: 1-7

II லூக்கா 11: 29-32

“நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாக இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்”

கிறிஸ்துவுக்கு உரியவரான பெரிய குடிகாரர்:

ஆரோக்கியத்தை நம்பித்தான் அவனுடைய குடும்பமே இருந்தது. ஆனாலும் அவன் தனக்குக் கிடைத்த ஊதியத்தை எல்லாம் குடித்துக் குடித்தே காலிசெய்தான். இதனால் அவனுடைய குடும்பம் வறுமையில் வாடியது.

இச்செய்தியை அறிந்த அவனுடைய பங்குப்பணியாளர் அவனைத் தேடிச் சென்று, குடியினால் அவனுடைய குடும்பம் எவ்வளவு துன்பப்படுகின்றது என்பதையும், குடியினால் ஏற்படும் சீர்கேடுகள் எத்தகையவை என்பதையும் அவனிடம் எடுத்துச்சொல்லிக் குடியை விட்டுவிடுமாறு அறிவுறுத்திவிட்டு வந்தார். இதற்குப் பிறகு ஆரோக்கியம் குடியை விட்டுவிட்டானா என்றால் இல்லை. ‘மாடாய் உழைக்கிறேன். அதனால் குடிப்பதில் என்ன தவறு இருக்கின்றது?’ என்று அவன் தன்னுடைய செயலை நியாயப்படுத்திக் கொண்டான் அதை விடவும் பங்குப்பணியாளரிடம் சென்றால், ‘அறிவுரை சொல்லி அறுப்பார்’ என்று அவன் அவரை முற்றிலுமாகத் தவிர்த்தான்.

ஒருசில ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் ஆரோக்கியம் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பங்குப்பணியாளரைப் பார்க்க வந்தான். அவனுடைய முகம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது. பங்குப்பணியாளர் அவனை வியப்போடு பார்த்தபோது, அவனே பேச்சைத் தொடங்கினான்: “சுவாமி! குடியை விட்டுவிட வேண்டும் என்று நீங்கள என்னிடம் அடிக்கடி சொன்னபோது, என்னிடத்தில் அது எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை; ஆனால், திடீரென எனக்குள் ஒலித்த குரல், ‘நீ குடியை விட்டுவிட வேண்டும்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தது. இதனால் நான் குடியை விட்டுவிட்டு, இப்பொழுது நான் சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் வீட்டில் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.”

ஆரோக்கியத்திடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த பங்குப் பணியாளர், “இப்பொழுதாவது குடியை விட்டுவிட்டாயே! அது போதும்” என்று அவனுக்கு ஆசி வழங்கி அனுப்பிவைத்தார்.

ஆம், மிகப்பெரிய குடிகாரனான ஆரோக்கியம் தனக்குள் ஒலித்த ஆண்டவரின் குரலைக் கேட்டு, அவருக்கு உரியவன் ஆனான். இன்றைய இறைவார்த்தை நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் ஆகவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

“பிற இனத்தாராகிய நீங்களும் கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்” – இப்படித்தான் இன்றைய முதல் வாசகம் நிறைவுறுகின்றது. பிற இனத்தவர்களாகிய உரோமையர்களுக்குக் கடிதம் எழுதும் பவுல், அவர்கள் பிற இனத்தவர்களாக இருந்தாலும், கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறார்கள் என்கிறார். பவுல் விடுக்கும் இந்த அழைப்பை, இன்றைய நற்செய்தி வாசகத்தோடு இணைத்துப் பார்க்கும்போது முழுமை பெறுகின்றது.

பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டபோது, அவர், எந்த அடையாளமும் தரப்பட மாட்டாது என்று சொல்லிவிட்டு யோனாவை அடையாளமாகத் தருகின்றார். யோனா நினிவே நகர மக்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்தபோது, அவர்கள் மனம்மாறிக் கடவுளுக்கு உரியவர்கள் ஆனார்கள். அவர்கள் பிற இனத்தவர்கள்; ஆனாலும் அவர்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்டு மனம்மாறிக் கடவுளுக்கு உரியவர்கள் ஆனார்கள். நாமும் கடவுளின் வார்த்தையைக் கேட்டு மனம்மாறிக் கடவுளுக்கு உரியவர்கள் ஆவதே கடவுளுக்கு ஏற்ற செயல்.

Comments are closed.