அக்டோபர் 10 : நற்செய்தி வாசகம்

மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

———————————————————————

“கேட்டுக் கொண்டிருந்தார்”

பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம் செவ்வாய்க்கிழமை

I யோனா 3: 1-10

II லூக்கா 10: 38-42

“கேட்டுக் கொண்டிருந்தார்”

பேசுவதைக் கேட்பதற்கு ஐந்து டாலர்:

ஒருமுறை அமெரிக்காவைச் சார்ந்த மறைப்பணியாளரான சார்ல்ஸ் ஸ்விண்டோல் (Chales Swindoll) கான்சாஸ் நகரிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில், “நீங்கள் எனக்கு ஐந்து டாலர் கொடுத்தால், நான் நீங்கள் பேசுவதை அரைமணி நேரம் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருப்பேன்” என்றோர் அறிவிப்புக் கொடுத்தார்.

‘பேசுவதைக் கேட்பதற்குப் பணமா?’ இது என்ன வித்தியாமான அறிவிப்பாக இருக்கின்றதே! பேசுவதைக் கேட்கிறவருக்கு யாராவது பணம் கொடுப்பாரா?’ என்றுஅந்த அறிவிப்பைப் படித்துப் பார்த்தவர்கள் புருவத்தை உயர்த்தினார்கள். ஆனால், அவர்கள் நினைத்ததற்கும் மாறாக, பத்திரிகையில் வந்த இந்த வித்தியாசமான அறிவிப்பைப் படித்துப் பார்த்துவிட்டு, பலரும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசி, அதற்குரிய ஐந்து டாலரை சார்லஸ் ஸ்விண்டோலுக்குக் கொடுத்தனர்.

பணம் போனாலும் பரவாயில்லை, நாம் பேசுவதைக் கேட்பதற்கு ஒருவர் இருக்கின்றார்! என்பது, ‘நான் பேசுவதை யாராவது காதுகொடுத்துக் கேட்கமாட்டாரா’ என்ற எத்தனையோ மனிதர்களின் ஏக்கத்தை நமக்கு வெளிப்படுத்துகின்றது. இன்றைய இறைவார்த்தை கடவுள் நம்மிடம் பேசுவதைக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

மனிதர்களில் சிலர் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படுவார்கள். பலருக்கு அது கிடையவே கிடையாது. அந்த வகையில், இன்றைய நற்செய்தி வரும் மரியா, இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பாட்டார் என்றுதான் சொல்லவேண்டும். எவ்வாறெனில், எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இயேசு, தான் அனுபவிக்க இருந்த பாடுகளைக் குறித்து மனக்கலக்கம் அடைந்திருந்தார். அதனால் அவர் தான் பேசுவதைக் கேட்பதற்கு யாராவது ஒருவர் கிடைக்கமாட்டாரா? என்ற ஏக்கத்தோடு இருந்திருக்கக்கூடும். இந்நிலையில்தான் மரியா இயேசு பேசுவதைக் கேட்கின்றார். அதனால் அவர் நல்ல பங்கைத் தேர்ந்துகொள்கின்றார்.

இன்றைய முதல் வாசகம் ஆண்டவர் பேசியதை, இறைவாக்கினர் யோனா வழியாகக் கேட்டு, அதனை நம்பி மனம்மாறிய நினிவே நகர மக்கள், தங்கள் மேல் வரவிருந்த அழிவிலிருந்து தப்பித்துக் கொள்கின்றார்கள். இதன்மூலம் கடவுள் நம்மிடம் பேசுவதைக் கேட்பது எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நமக்குத் தெளிவாகின்றது.

இன்றைக்குப் பலர் ஆண்டவர் திருவிவிலியத்தின் வழியாகவும், தம் அடியார்கள் வழியாகவும் பேசுவதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. கடவுளின் வார்த்தையைக் கேளாமல், அவர்மீது எப்படி நம்பிக்கை ஏற்படும்? (உரோ 10: 17). கடவுளின் வார்த்தையைக் கேளாமல் நிச்சயம் அவர்மீது நம்பிக்கை ஏற்படாது. ஆகையால், நாம் அவர் பேசுவதற்குச் செவிசாய்த்து, அவர் தருகின்ற ஆசியைப் பெறுவோம்.

Comments are closed.