செபம் தவம் கொண்டு இறையழைத்தலுக்காக செபியுங்கள்

அர்ப்பணித்தல், அருங்கொடை அடையாளம், சகோதர ஒன்றிப்பு மற்றும் மறைப்பணி, துறவற வாழ்வின் அடிப்படை அம்சங்கள் என்றும், இவ்வாழ்வை ஆழப்படுத்துவதற்கு தேவையான செவிமடுக்கும் திறன், தெளிந்து தேர்தல், செபம், பகிர்வு, துணிவு ஆகியவை இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 18 திங்கள் கிழமை வத்திக்கானில் இயேசுவின் திருஇருதயத்தின் ரோகேசனிஸ்டுகள் சபை உறுப்பினர்கள் மற்றும் இறைபேரார்வத்தின் புதல்வியர் சபை அருட்சகோதரிகள் (Suore Figlie del Divino Zelo) ஆகியோரை சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சபையின் புனிதரான புனித அன்னிபாலின் தூண்டுதலில் பிரமாணிக்கமாக இருத்தல், மாறிவரும் உலகின் தேவைகளில் கவனம் செலுத்துதல் போன்ற கருப்பொருள்களைப் பற்றி விவாதிக்க இருக்கும் அவர்களை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் குறிப்பிட்ட பணியின் ஆணிவேராகவும், அச்சபையினரின் நான்காவது வார்த்தைபாடான ரோகேட் என்னும் இறையழைத்தலுக்காக செபிப்பதைப் பற்றியும் வலியுறுத்தினார்.

செபம் என்பது புனிதர் அன்னிபாலின் வாழ்க்கை முழுவதும் தொடரும் சிவப்பு நூல் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருடைய இறையழைத்தல் மிகவும் உறுதியானது என்றும், தன்னை கடவுளுக்கு முன்பாக ஆயத்தப்படுத்தும் ஒருவர் வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட புரிதலைப் பெறுகிறார் என்றும் கூறினார்.

நீங்கள் செபத்தில் நிலைத்திருக்கவில்லை என்றால் எங்கு செல்வது என்று உங்களுக்கு தெரியாது. எனவே ஒவ்வொரு நாளும் ஆண்டவருடன் நீண்ட உரையாடலில் ஈடுபடுவது மிக முக்கியம் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஒவ்வொரு முக்கியமான நிகழ்வு, நேரம், சந்திப்பு, தொடக்கம், முடிவு என அனைத்திலும் இறைவனை நோக்கி செபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Comments are closed.