இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
ஆசிரியர் தினமான இன்று நமக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்காக விஷேசமாக செபிப்போம்.
தற்போது ஆசிரியர்கள் கல்வி நிலையங்களில் பணி செய்ய ஏற்ற நல்ல சூழ்நிலை நிலவிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
‘பிறர் அன்பின் பணியாளர் சபை’ யின் நிறுவனரும், இன்றைய புனிதருமான புனித அன்னை தெரசா உலகில் உள்ள அனைத்து கருணை இல்லங்களின் பாதுகாவலராவார்.
உலகம் முழுவதும் கருணை இல்லங்களில் சேவை செய்துவரும் எண்ணற்ற சபைகளின் அருட்பணியாளர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.” என புனித பவுலடியார் கூறுகிறார்.
வாழும் காலத்தில் பிறரை உண்மையாக அன்பு செய்து, அவர்களது ஆன்மீக வாழ்வில் அவர்களை ஊக்கமூட்டி வளர்ச்சியடையச் செய்ய இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 27:1-ல், “ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
கடவுளுக்கு அஞ்சி, பாவங்கள் செய்யாது நேர்மையோடு தூய வாழ்வு வாழ்வோர் இவ்வுலகில் எவரைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. அத்தகைய புனித வாழ்வை நாம் வாழ இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட மாதத்தின் முதல் செவ்வாயான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.