அதிதூய கன்னி மரியாளின் பிறப்பு
மரியாளின் பிறப்பு என்பது இயேசு கிறிஸ்துவின் தாயான தூய கன்னி மரியாளின் பிறந்த நாளைக் குறிக்கிறது. திருமுறை சாராத கி.பி. 2ம் நூற்றாண்டு நூலான யாக்கோபின் முதல் நற்செய்தியில் இருந்து அவரது பெற்றோரின் பெயர் சுவாக்கின் – அன்னா என்று அறிந்து கொள்கிறோம். மரியாளின் பிறப்பு விழா செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.
யாக்கோபு நற்செய்தி:
கி.பி. 2ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாக்கோபின் முதல் நற்செய்தி, கன்னி மரியாளின் பிறப்பைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறது:
எருசலேம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான யோவாக்கிம் (சுவக்கீன்), அவரது மனைவி அன்னா (அன்னம்மாள்) இருவரும் குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர். இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாளின் பிறப்பை அவர்களுக்கு முன்னறிவித்தார். அதனால் மனம் மகிழ்ந்த இருவரும் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். பத்தாம் மாதத்தில் அன்னா தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். வானதூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு மரியாள் (கடலின் நட்சத்திரம்) என்று பெயரிட்டனர்.
மரியாளுக்கு மூன்று வயது ஆனபோது, அவரது பெற்றோர்கள் மரியாளை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்தனர். அங்கிருந்த கல்வி சாலையில், மரியாள் எபிரேய எழுத்துகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களை படித்து, அதில் இருந்த மெசியா பற்றிய இறைவாக்குகளின் பொருளை கேட்டு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மறைநூல்களின் வார்த்தைகளை வாசித்து அவற்றை மனதில் இருத்தி சிந்திப்பதில் மரியாள் ஆர்வம் கொண்டிருந்தார்; பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் சிறந்து விளங்கினார். ஆலயத்திற்கு தேவையான திரைச் சீலைகளை நெய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றார்.
கிறிஸ்தவ மரபு:
மரியாளின் பிறப்பு பற்றி யாக்கோபின் முதல் நற்செய்தியில் காணப்படும் செய்தியே, திருச்சபையின் மரபாக இந்நாள் வரை நிலைத்திருக்கிறது. அத்துடன் மரியாளின் பிறப்பு செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் பழங்காலம் முதலே நம்பப்படுகிறது. இறைமகன் இயேசுவின் தாயாகுமாறு, அன்னாவின் வயிற்றில் கன்னி மரியாள் கருவாக உருவானபோதே பிறப்புநிலைப் பாவமின்றி உற்பவித்ததாக கத்தோலிக்க திருச்சபை கற்பிக்கிறது.
✞ மரியன்னையின் பிறப்புவிழா:
நிகழ்வு:
ஒரு சமயம் இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கும் இடையே கடுமையாகப் போர் நடைபெற்றபோது, இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய வீரன் ஒருவனைக் கொல்ல நேர்ந்தது. அப்போது இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய படைவீரனின் அன்னைக்கு இவ்வாறு ஒரு கடிதம் எழுதினான்: “போர் நிமித்தமாக உங்களது மகனைக் கொல்ல வேண்டி வந்தது. ஆனாலும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். என்னை மன்னிப்பீர்களா?” அதற்கு அந்தத் தாய் பதில் எழுதினாள்: “மனதார உன்னை மன்னித்துவிட்டேன். போர் முடிந்து நாம் இருவருமே உயிர்வாழ நேர்ந்தால் கிளம்பி வா. என் உள்ளத்திலும் இல்லத்திலும் மகனாக வாழ உன்னை அன்புடன் அழைக்கின்றேன்”.
இக்கடிதம் கண்ட அந்த இங்கிலாந்து நாட்டுப் படைவீரன், அந்த ஜெர்மானியத் தாயின் மன்னிக்கும் அன்பை நினைத்து பெருமிதம் கொண்டான்.
தாய் என்றாலே எப்போதும் மன்னிப்பவள்தானே. இன்று நாம் பிறந்த நாளைக் கொண்டாடும் மரியன்னையும்கூட நாம் செய்யும் தவறுகளை மன்னித்து, தன்னுடைய மகனிடம் நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது ஆழமான உண்மை.
வரலாற்றுப் பின்னணி:
மரியாவின் பிறப்பைக் குறித்து கி.பி. 170 ஆம் ஆண்டு எழுதப்பட்ட – திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத – தூய யாக்கோபு நற்செய்தியில் இடம்பெறும் நிகழ்வு.
மரியாவின் பெற்றோரான ஜோக்கினும் அன்னாவும் திருமணம் செய்து இருபது ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இருந்தாலும் அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் ஜோக்கின் எருசலேம் திருக்கோவிலுக்கு பலி ஒப்புக்கொடுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த தலைமைக்குரு ரூபன் என்பவர் ஜோக்கினிடம், “உனக்குத்தான் குழந்தை இல்லையே. பிறகு எதற்கு இங்கு வந்து பலி செலுத்துகிறீர். உம்முடைய பலியை எல்லாம் கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் தயவுசெய்து இங்கிருந்து போய்விடும்” என்று கடினமான வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார். இதனால் மனம் உடைந்துபோன ஜோக்கின் தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில் எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்று, நீண்ட நாட்கள் ஆகியும் தன்னுடைய கணவர் திரும்பி வராததைக் கண்ட அன்னா, தன்னுடைய கணவர் உண்மையிலே இறந்துவிட்டார் என நினைத்து, விதவைக்கோலம் பூண்டு நின்றார். அப்போதுதான் ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “அன்னா! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டது. நீர் கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுப்பீர். அவருக்கு மரியாள் எனப் பெயரிடுவீர்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் வானதூதர் ஜோக்கினுகுத் தோன்றி, அதே செய்தியை அவரிடத்திலும் சொன்னார். இச்செய்தியைக் கேட்ட ஜோக்கின் மிகவும் மகிழ்ந்தார். வானதூதர் அவர்களுக்குச் சொன்னது போன்றே மரியாள் அவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.
மரியாவின் பிறப்பு உண்மையிலே இறை வல்லமையால்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால், விவிலியத்தில் நிகழ்ந்த ஒருசில முக்கியமான நபர்களின் பிறப்பு இறைவல்லமையால் நிகழ்ந்திருக்கின்றது. ஈசாக்கு (தொநூ 21: 1-3) சிம்சோன் (நீதி 13: 2-7), சாமுவேல் (1சாமு 1: 9-19), திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-24), இயேசு கிறிஸ்து (லூக்1:26-38) இவர்களுடைய பிறப்பு எல்லாம் சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. இறை வல்லமை அங்கே அதிகதிகமாக செயல்பட்டிருக்கிறது. மரியாவும் மீட்பின் வரலாற்றில் சாதாரணமான ஒரு நபர் இல்லை. இந்த உலகத்தை உய்விக்க வந்த ஆண்டவர் இயேசுவையே பெற்றெடுத்தவள். எனவே, அவருடைய பிறப்பிலும் இறை வல்லமை அதிகமாகச் செயல்பட்டிருக்கும் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
Comments are closed.