இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றைய ஞாயிறு திருப்பலி பதிலுரைப்பாடலில்

“நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.” என்று திருப்பாடல் (63:8) கூறப்பட்டுள்ளது. நாம் இறைவனை உறுதியாகப் பற்றிக் கொள்ளவும், இறைவன் தமது வலக்கரத்தால் நம்மை இறுகப்பிடித்து நம்மை வழிநடத்தவும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி இரண்டாம் வாசகத்தில் “கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.” என்று பவுலடியார் கூறுகிறார்.

தனிமனித விருப்பத்தின்படி நாம் செயல்படுவது பல சமயங்களில் நம்மை அறியாமல் அலகையின் திட்டத்தை நிறைவேற்ற துணை போகும் நிலைக்கு உள்ளாக நேரிடுகிறது. அதற்கு மாறாக இறைவனின் திருவுளத்தை அறிந்து அதன்படி நடக்க தேவையான வழிநடத்துதலை தூய ஆவியார் அளித்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நமக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் கிடைக்கப் பெறவேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.” என்று இயேசு தமது சீடர்களுக்கு கூறுகிறார். இயேசுவைப் போல நாமும் நமது துன்பங்களை தாங்கிக் கொள்ள தேவையான பொறுமையையும், மனதிடத்தையும் இறைவன் அளித்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.!

Comments are closed.