இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 145:18-ல்
“தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.” என்று கூறப்பட்டுள்ளது. நாம் இறைவனிடத்தில் வேண்டும்போது நமதாண்டவர் இயேசு நம் அருகாமையில் இருப்பதை உணர வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்ற ஆண்டவர் இயேசுவின் அழைப்பை ஏற்று அர்மேனியாவில் நற்செய்தி அறிவிக்கச் சென்று மறைசாட்சியாக மரித்த
தூய பார்த்தலமேயுவின் விழாவை இன்று கொண்டாடும் நாம் அவரைப் போல கள்ளம் கபடற்றவர்களாக வாழ இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையை நாடி வேளாங்கண்ணிக்கு தற்போது பாதயாத்திரை மேற்க்கொள்ளும் எண்ணற்ற அன்னையின் பக்தர்களின் வேண்டுதல்கள் கேட்கப்பட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
மேட்டூர் அணையில் குறைந்துவரும் நீர் மட்டம் காவேரி டெல்டா விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகாவில் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
மிசோரம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
Comments are closed.