ஜூலை 28 : நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்பவர்கள் பயன் அளிப்பர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான்.

பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.

முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறை வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————–

“உன் தந்தையையும் தாயையும் மதித்து நட”

பொதுக்காலம் பதினாறாம் வாரம் வெள்ளிக்கிழமை

I விடுதலைப் பயணம் 20: 1-17

II மத்தேயு 13: 18-23

“உன் தந்தையையும் தாயையும் மதித்து நட”

மகன் பெற்றோருக்குச் செய்த அறுசுவை விருந்து:

அன்று அந்தக் குடும்பத்தில் இருந்த கணவன் மனைவியினுடைய திருமண நாள். அதனால் அன்று அவர்களுடைய வீடு அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒருபக்கம் கணவன் பிள்ளைகளை எழுப்பிக் குளிக்கவைத்து, அவர்களுக்குப் புத்தாடை உடுத்திக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மனைவி அறுசுவை உணவையும், தின்பண்டங்களையும் தயார் செய்துகொண்டிருந்தார்.

சிறிதுநேரத்தில் கணவன், தானும் குளித்துத் தன் பிள்ளைகளையும் குளிக்க வைத்துத் தயாராகிவிட, மனைவி சமையலறையில் முடிக்கவேண்டிய வேலைகளைத் தாமதிப்படுத்திக் கொண்டிருந்தார். இதனால் கணவன் தன் மனைவியிடம், “அப்பாவும் அம்மாவும் காலை ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவார்கள். அதனால் நீ இப்படித் தாமதப்படுத்தினால் அவர்கள் பசியோடுதான் இருக்கவேண்டி வரும்” என்று சொல்லி, அவரை அவசரப்படுத்தினான். “இன்னும் சிறிதுநேரத்தில் எல்லா வேலைகளும் முடிந்துவிடும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்று சொல்லி மனைவி சமையல் வேலையைச் சீக்கிரமாக முடித்துகொண்டு, குளித்துப் புத்தாடை உடுத்தித் தயாரானார்.

எல்லாரும் தயாரான பின்பு சமைத்த உணவையும் தின்பண்டங்களையும் எடுத்துக்கொண்டு, வண்டியில் ஏறி, முதியோர் இல்லத்திற்குச் சென்றார்கள். ஆம், திருமண நாள் அன்று முதியோர் இல்லத்தில் இருந்த தன் பெற்றோரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், கணவன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து மிகவும் பரபரப்பாக இருந்தான்.

பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, அவர்களை எப்பொழுவதாக பார்க்கக்கூடிய; ஏன் பார்க்கவே பார்க்காத அவல நிலைதான் இன்று பல இடங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில், இன்றைய முதல்வாசகம், “உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட” என்று கூறுவதைக் குறித்துச் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இறையன்பு (2-11), பிறரன்பு (12-17) என்ற இரண்டு முதன்மையான கட்டளைகளை அடிநாதமாகக் கொண்ட பத்துக்கட்டளைகளை ஆண்டவராகிய கடவுள் தன் அடியார் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு வழங்குவதைத்தான் இன்று நாம் முதல் வாசகமாக வாசிக்கக் கேட்டோம். இதில் இடம்பெறும் ஒரு கட்டளைதான், “உன் தந்தையும் உன் தாயையும் மதித்து நட” என்பதாகும்.

யூதா நாட்டினர் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஒரு முக்கியமான காரணம், அவர்கள் தங்கள் தந்தையும் தாயையும் மதித்து நடக்கவில்லை (எசே 22: 7, 15) என்பதாகும். அப்படியெனில் ஒருவர் தன் தாய், தந்தையை மதித்து நடக்கின்றபொழுது, அவர்களுடைய அறிவுரைச் செவிமடுக்கின்றபொழுது, அவர்கள் இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுவதுபோன்று முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலந்தருவார்கள் என்று உறுதி. நாம் நம் தாய் தந்தையை மதித்து நடக்கின்றோமா?

Comments are closed.