புனிதர் †
✠ புனிதர் ஷார்பெல் மக்லௌஃப் ✠
(St. Sharbel Makhlouf)
புனிதர் ஷார்பெல் மக்லௌஃப் ✠
(St. Sharbel Makhlouf)
(Maronite monk and Priest)
பிறப்பு: மே 8, 1828
பெகா கஃப்ரா, நார்த் கவர்னரெட், லெபனான்
(Bekaa Kafra, North Governorate, Lebanon)
இறப்பு: டிசம்பர் 24, 1898 (வயது 70)
புனித மாரோன் அன்னையா துறவு மடம், ஜ்பெய்ல் மாவட்டம், லெபனான்
(Monastery of St. Maron Annaya, Jbeil District, Lebanon)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
(Eastern Catholic Churches)
முக்திபேறு பட்டம்: டிசம்பர் 5, 1965
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)
புனிதர் பட்டம்: அக்டோபர் 9, 1977
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)
முக்கிய திருத்தலம்:
புனித மாரோன் அன்னையா துறவு மடம், ஜ்பெய்ல் மாவட்டம், லெபனான்
(Monastery of St. Maron Annaya, Jbeil District, Lebanon)
நினைவுத் திருநாள்: ஜூலை 24
புனிதர் ஷார்பெல் மக்லௌஃப், ஒரு லெபனான் (Lebanon) நாட்டைச் சேர்ந்த “மாரனைட்” (Maronite monk) துறவியும், குருவும் ஆவார். தமது வாழ்நாள் முழுதும் தமது தூய்மையான வாழ்விற்காக பரவலான புகழ் பெற்றவர் ஆவார். கத்தோலிக்க திருச்சபை இவரை புனிதராக அருட்பொழிவு செய்து கௌரவித்தது.
“ஜோசஃப் ஸரௌன் மக்லௌஃப்” (Joseph Zaroun Makluf) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1828ம் ஆண்டு, மே மாதம், 8ம் தேதி பிறந்தார் இவருடைய தந்தை பெயர், “அன்டௌன் ஸாரௌர் மக்லௌஃப்” (Antoun Zaarour Makhlouf) ஆகும். தாயாரின் பெயர், “பிரிஜிட்டா சிடியாக்” (Brigitta Chidiac) ஆகும். இவர், தமது பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் ஒருவராவார். இவர்கள், “பெகா கஃப்ரா” (Bekaa Kafra) எனும் கிராமத்தில் வசித்தார்கள். அது, லெபனானின் மலைகளிலேயே மிக உயர்ந்த மலையாகும். கோவேறு கழுதை ஓட்டுனரான இவரது தந்தை, இவருக்கு மூன்று வயதாகையில் மரித்துப் போனார். ஐந்து குழந்தைகளையும் பராமரிக்க இயலாமல் தவித்துப் போன தாயார், வேறொரு ஆணை மறுமணம் செய்துகொண்டார். அவரோ, சிறிது காலத்திலேயே துறவறம் பெற்று, அவர்களது பங்கிலேயே பங்கு குருவானார்.
பக்தியுள்ள தமது மாமனின் வீட்டில் வளர்க்கப்பட்ட இளம் ஜோசஃப், விரைவில் புனிதர்கள் மற்றும் துறவியரின் தூய வாழ்க்கையில் ஈர்க்கப்பட்டார். சிறு வயதில் தமது மாமன் வீட்டு சிறு மந்தையை மேய்க்கும் பொறுப்பும் இவருக்கு இருந்தது. அருகாமையிலிருந்த அன்னை மரியாளின் கெபியொன்றினருகே மந்தையை இட்டுச் செல்லும் இவர், நாள் முழுதும் செபத்திலேயே கழிப்பார்.
கி.பி. 1851ம் ஆண்டு, தமது இருபத்துமூன்று வயதில் வீட்டை விட்டு வெளியே வந்த இவர், “மேஃபௌக்” (Mayfouq) கிராமத்திலுள்ள அன்னை மரியாளின் துறவு மடத்தில், “லெபனான் மாரனைட் சபையில்” (Lebanese Maronite Order) சேர்ந்து, தமது துறவற பயிற்சியை தொடங்கினார். பின்னர், லெபனானில் தலைநகரான “பெய்ரூட்” (Beirut) அருகேயுள்ள “ஜ்பெய்ல்” (Jbeil District) ஜில்லாவிலுள்ள “அன்னையா” (Annaya) எனுமிடத்திலுள்ள “புனித மாரன்” துறவு மடத்தில் (Monastery of St. Maron) இணைந்தார். துறவற சீருடைகளைப் பெற்றுக்கொண்ட இவர், “ஷார்பெல்” எனும் பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். தமது இறுதி சத்திய பிரமாணத்தை கி.பி. 1853ம் ஆண்டு, நவம்பர் மாதம், 1ம் தேதியன்று, எடுத்தார்.
“பட்ரௌன்” ஜில்லாவின் (Batroun District) “கிஃபிஃபன்” (Kfifan) எனும் இடத்திலுள்ள “புனிதர்கள் சிப்ரியான் மற்றும் ஜாஸ்டினா” (Monastery of Saints Cyprian & Justina) துறவு மடத்தில் இறையியல் மற்றும் தத்துவயியல் கற்க ஆரம்பித்தார். குருத்துவம் பெறுவதற்கு தகுதியாக தம்மைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டார். ஆறு வருடங்களின் பின்னர், கி.பி. 1859ம் ஆண்டு, ஜூலை மாதம், 23ம் நாளன்று, “ப்கெர்கே” (Bkerke) எனுமிடத்தில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
கி.பி. 1875ம் ஆண்டு முதல் தமது மரண காலம் வரை, ஐந்தாம் நூற்றாண்டின் “புனிதர் மாரன்” (Saint Maron) அவர்களை முன்னோடியாகக் கொண்டு தூய வாழ்க்கை வாழ்ந்தார். மக்கள் மத்தியில் பரிசுத்தத்திற்கான அவரது புகழ், அவரிடம் ஆசீர்வாதம் பெற மக்களைத் தூண்டியது. மற்றும், அவரது ஜெபங்களில் தாம் நினைவுகூரப்பட வேண்டும் என்று மக்கள் நினைத்தனர். கடுமையான விரதத்தை கடைப்பிடித்த அவரிடம் நற்கருனையாண்டவரின் பக்தி மிகுந்திருந்தது.
கி.பி. 1898ம் ஆண்டு, ஆண்டவர் பிறப்புக்கு முதல் தினம் மாலையில் அவர் மரித்தார். கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர் அல்லாதவர்கள் இணைந்து, அவரது கல்லறை ஸ்தலத்தை ஒரு புனித யாத்திரை ஸ்தலமாகவும், குணப்படுத்தும் ஸ்தலமாகவும் மாற்றினார்கள். 1965ம் ஆண்டு இவருக்கு முக்திபேறு பட்டம் அளித்த திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI) அவர்கள், 12 வருடங்கள் கழித்து, 1977ம் ஆண்டு இவரை புனிதராக உயர்த்தி அருட்பொழிவு செய்தார்.
Comments are closed.