ஜூலை 24 : நற்செய்தி வாசகம்

தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-42

அக்காலத்தில்

மறைநூல்அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, “போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்” என்றனர்.

அதற்கு அவர் கூறியது: “இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.

தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!

தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————-

கடவுளை நம்பாத மக்கள்

பொதுக்காலம் பதினாறாம் வாரம் திங்கட்கிழமை

I விடுதலைப் பயணம் 14: 5-18

II மத்தேயு 12: 38-42

கடவுளை நம்பாத மக்கள்

கடவுளை நம்பாத யூரி ககாரின்

‘விண்வெளியை அடைந்த முதல் மனிதர்’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இரஷ்யாவைச் சார்ந்த யூரி ககாரின் (Yuri Gagarin). கடவுள் நம்பிக்கை இல்லாத இவர் 1961 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 12 ஆம் நாள் வஸ்தோத் என்ற விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்றார். ஏறக்குறைய 112 மைல்கள் பூமியிலிருந்து மேலே பரந்த விண்கலம், பூமியை ஒருமுறை சுற்றிவிட்டுத் தரையிறங்கியது.

இந்த நிகழ்விற்குப் பிறகு ஒருசிலர், “கடவுள் நம்பிக்கை இல்லாத யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்றும், கடவுளைக் கண்டிருக்கமாட்டார்” என்று பேசிக்கொண்டனர். சி.எஸ் லூயிஸ் என்ற அறிஞரும்கூட இதுகுறித்துத் தன் கருத்துகளைக் கூறும்பொழுது இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்த பூமியில் கடவுளைக் காண முடியாதவர்களால் விண்வெளிக்குச் சென்றாலும் காணமுடியாது.”

சி.எஸ்.லூயிஸ் என்ற அறிஞர் சொன்ன வார்த்தைகள்தான் எத்துணை உண்மையானவை. இன்று யூரி ககாரினைப் போன்று எத்தனையோ மனிதர்கள் கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றார்கள். இன்றைய இறைவார்த்தையிலும் கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாத மனிதர்களைக் குறித்து வாசிக்கின்றோம். இவர்களுக்கு – நமக்கு – இயேசு என்ன சொல்ல வருகின்றார் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட இயேசு சென்ற இடங்களிலெல்லாம் நன்மைகள் செய்துகொண்டு சென்றார் (திபா 10: 38). இவற்றையெல்லாம் பரிசேயர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் கண்டார்கள்; ஆனால், அவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடாகத்தான், இன்றைய நற்செய்தியில் அவர்கள் இயேசுவிடம் அடையாளம் ஒன்றைக் காட்டவேண்டும் என்று கேட்கின்றார்கள். இயேசு அவர்களிடம் யோனாவின் அடையாளத்தைத் தவிர, வேறு எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டது என்கிறார். காரணம், யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். மானிட மகனும் அவ்வாறே மூன்று இரவும் மூன்று பகலும் நிலத்தின் உள்ளே இருப்பார் என்பதால்.

முதல் வாசகத்தில் எகிப்தியக் குதிரை வீரர்கள் தங்களைப் பின்தொடர்ந்து வருவதைக் கண்டு அஞ்சிய இஸ்ரயேல் மக்கள், ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் மோசேக்கும் ஆண்டவருக்கும் எதிராக முணுமுணுக்கின்றார்கள். அப்பொழுதுதான் மோசே அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்” என்கிறார். இதன்பிறகு ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைச் செங்கடலைக் கால் நனையாமல், கடக்கச் செய்து, எகிப்தியக் குதிரை வீரர்களைக் கடலில் மூழ்கடிக்கின்றார். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கவில்லை. இதனால் அவர்கள் கண்டிக்கப்படுகின்றார்கள். நாம் அவர்களைப் போன்று இல்லாமல், ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 கடவுள் அனுப்பியவரை நம்புவதே, கடவுளுக்கேற்ற செயல் (யோவா 6: 29).

 நம்பிக்கையிலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க முடியாது (எபி11: 6)

 நம் வாழ்வில் கடவுள் செய்த வல்ல செயல்களை நினைத்து, அவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம்.

Comments are closed.