பயணிக்கும் திருஅவை எப்போதும் பலம் பொருந்தியது : திருத்தந்தை

நதியில் தண்ணீர் ஓடவில்லை என்றால், அது தேங்கி நோய்வாய்ப்படும். ஆனால் ஒரே இடத்தில் தேங்கி நிற்காமல் நதிபோல தொடர்ந்து பயணிக்கும் திருஅவை எப்போதும் பலம் பொருந்தியாகவே இருக்கின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரேசிலின் Mato Grosso-விலுள்ள Rondonópolis என்னும் நகரில் ஜூலை 18, இச்செவ்வாயன்று தொடங்கிய அடிதளக் கிறித்தவ குழுமங்களுக்கிடையேயான மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது நெருக்கத்தை அவர்களுடன் வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

அவர்களின் பணிகளில் தொடர்ந்து கருத்தாய் இருக்கும்படி இம்மாநாட்டின் பங்கேற்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, ‘வெளியே பயணிக்கும் திருஅவை’ என்ற இம்மாநாட்டின் கருப்பொருளோடு இணக்கத்தைத் தேட மறவாதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரேசில் முழுவதிலுமிருந்து அடிதளக் கிறித்தவ குழுமங்களின் ஏறத்தாழ 1,500 பிரதிநிதிகள், விசுவாசிகள், கத்தோலிக்கத் திருஅவையுடன் தொடர்புடைய அமைப்புகளின் தலைவர்கள், பிற கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் ஆன்மிக மற்றும் பிரபலமான சமூக இயக்கங்கள் ஆகியவை இம்மாநாட்டில் பங்குபெறுகின்றன. வரும் 22-ஆம் தேதி சனிக்கிழமை வரை நடைபெறும் இக்கூட்டத்தில் 63 ஆயர்கள் பங்கேற்கின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்மாட்டின் தொடக்க விழாவில் பல ஊர்வலங்கள், இசை மற்றும் பூர்வீக இனமக்கள், குயிலோம்போலாக்கள், விவசாயிகள், தற்காலிக முகாம்களில் உள்ளவர்கள், மீனவர்கள், நகர்ப்புற தொழிலாளர்கள், பெண்கள் கைவினைஞர்கள், இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர், பிரேசிலிய மக்களை உருவாக்கும் பிற சமூகக் குழுக்கள் ஆகியவற்றின் பங்களிப்பு சிறப்பாக அமைந்திருந்தது.

Comments are closed.