ஜூலை 21 : நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8

அன்று ஓர் ஓய்வு நாள். இயேசு வயல் வழியே சென்றுகொண்டிருந்தார். பசியாய் இருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், “பாரும், ஓய்வுநாளில் செய்யக் கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்” என்றார்கள்.

அவரோ அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா? இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா?

மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா? ஆனால் கோவிலை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

———————————————————————–

சீடர்களுக்காகக் குரல் கொடுத்த இயேசு

பொதுக்காலம் பதினைந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை

I விடுதலைப் பயணம் 11: 10 -12: 14

II மத்தேயு 12: 1-8

சீடர்களுக்காகக் குரல் கொடுத்த இயேசு

அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்த சேகுவேரா:

உலகில் எங்கெல்லாம் அநீதி நடந்ததோ அதற்கெதிராகக் குரல் கொடுத்தவர் சே குவேரா. பொலிவியாவின் விடுதலைக்காக அவர் போராடியபோது பிடிபட்டு, ஒரு பள்ளிக்கூடக் கட்டடத்தில் அடைத்து வைக்கப்பட்டார். அந்தக் கட்டடம் மிகவும் மோசமாக இருந்தது. அதைப் பார்த்துவிட்டு, ‘என்ன இவர்கள் இந்தப் பள்ளிக்கூடக் கட்டத்தை இவ்வளவு மோசமாக வைத்திருந்திருக்கின்றார்கள்!’ என்று வருந்தினார். அப்பொழுது அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் அங்கு வந்தார். சேகுவேரா அவரிடம், “இந்தக் கட்டடம் இவ்வளவு மோசமாக இருந்தும், இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றீர்களே! ஒருவேளை இக்ககட்டடம் இடிந்து பள்ளிக்குழந்தைகள்மேல் விழுந்தால் என்னாவது…? எங்கள் புரட்சி வெல்லட்டும், அப்பொழுது இங்கு புதிதாக ஒரு பள்ளிக்கூடக் கட்டத்தைக் கட்டி எழுப்புவோம்” என்றார்.

தான் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டபோதும், தான் அடைத்துவைக்கப்பட்ட பள்ளிக்கூடக் கட்டடம் மோசமாக இருக்கின்றதே, அதைச் சரி செய்யவேண்டும் என்று சேகுவேரா குரல் கொடுத்தது, உண்மையிலேயே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. நற்செய்தியில், ஓய்வுநாள் அன்று தன் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதைப் பெரிய குற்றம் என்று பரிசேயர்கள் பேசியபொழுது, இயேசு தன் சீடர்கள் சார்பாக இருந்து, பரிசேயர்கள் செய்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

கைகளால் கதிர்களைக் கொய்வது ஒன்றும் தவறில்லை; கதிர் அரிவாளை அடுத்தவரின் கதிர்களில் வைப்பதுதான் குற்றம் (இச 23: 25) என்று மோசேயின் சட்டம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றது. அப்படியிருந்தும், தன் சீடர்கள் பசியில் கதிர்களைக் கொய்து உண்டதை, ஓய்வுநாளில் செய்யக்கூடாததைச் செய்துவிட்டதாக அவர்கள்மீது பரிசேயர்கள் குற்றம் சாட்டியதால்தான், இயேசு சீடர்கள் சார்பாக நின்று பேசவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

பரிசேயர்கள் சீடர்கள்மீது குற்றம் சாட்டியபொழுது, இயேசு அவர்களுக்கு நான்கு விதமான பதில்களை அளிக்கின்றார். ஒன்று, தாவீதும் அவருடைய தோழர்களும் குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்டது (1 சாமு 21: 4-6). இரண்டு, ஓய்வுநாளிலும் குருக்கள் திருக்கோயிலில் பணியாற்றுவது. மூன்று, இயேசு தன்னைக் கோயிலைவிடப் பெரியவர் என்பது. நான்கு பலியைவிட இரக்கத்தையே விரும்புகிறேன் என்பது.

இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் சுமத்திய பரிசேயர்கள், பசியில்தான் அவர்கள் கதிர்களைக் கொய்து உண்டிருக்கின்றார்கள் என்று பெருந்தன்மையோடு நடந்திருக்கவேண்டும். அவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளாததால்தான், இயேசு தன் சீடர்கள் சார்பாக இருந்து, பரிசேயர்களைச் சாடுகின்றார். நாமும் இயேசுவைப் போன்று எளியவர்கள் சார்பாக இருந்து, அவர்களை அடக்குகின்றவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது இன்றியமையாதது.

Comments are closed.