ஜூலை 20 : நற்செய்தி வாசகம்
நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30
இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————–
இருக்கின்றவராக இருக்கின்றவர் தரும் இளைப்பாறுதல்
பொதுக்காலம் பதினைந்தாம் வாரம் வியாழக்கிழமை
I விடுதலைப் பயணம் 3: 13-20
II மத்தேயு 11: 28-30
இருக்கின்றவராக இருக்கின்றவர் தரும் இளைப்பாறுதல்
இளைப்பாறுதல் தரும் மரம்:
தச்சர் ஒருவர் இருந்தார். இவர் ஒவ்வொருநாளும் காலை எட்டு மணிக்கு வேலைக்குச் சென்று, மாலை எட்டு மணிக்கு வீட்டிற்குத் திரும்பி வருவார். இவ்வாறு இவர் வேலைக்குச் சென்று, வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது, வீட்டிற்கு முன்பு இருக்கும் ஒரு சிறிய மரத்தின்மேல் தன் இரு கைகளையும் குவித்துக் கண்களை மூடி, ஒருசில வார்த்தைகளை உச்சரித்துவிட்டு வீட்டிற்குள் செல்வார். பின்னர் இவர் வழக்கம்போல் காலையில் எழுந்து வேலைக்குச் செல்வார்.
இது பல நாள்களாகத் தொடர்வதைக் கவனித்த இவரது பக்கத்து வீட்டுக்காரர், “உங்களை நான் பல நாள்களாகக் கவனித்து வருகின்றேன். வேலைக்குச் சென்று, வீட்டிற்குத் திரும்பி வரும் நீங்கள், இந்த மரத்தின்மேல் கைகளைக் குவித்துக் கண்களை மூடி, ஏதோ உச்சரிக்கின்றீர்கள். நீங்கள் ஏன் இப்படியெல்லாம் செய்கின்றீர்கள்?” என்றார். இதற்கு இவர் அவரிடம், “இதோ இருக்கின்றதே மரம்! இந்த மரத்திற்கு நான் இட்ட பெயர் இளைப்பாறுதல் மரம். ஏனெனில், வேலைக்குச் சென்று, வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது, பல்வேறு விதமான பிரச்சனைகள், மனக்கசப்புகள், சுமைகளோடு நான் வீட்டிற்கு வருவேன். இவற்றையெல்லாம் வீட்டிற்குள் கொண்டுசென்றால், வீட்டில் இருப்பவர்களுக்குத்தான் பிரச்சனை. அதனால் நான் என்னுடைய பிரச்சனைகள், துன்பங்கள் யாவற்றையும் இந்த இளைப்பாறுதல் மரத்தில் இறக்கி வைத்துவிடுவேன். மறுநாள் நான் வழக்கம்போல் வேலைக்குச் செல்கின்றபொழுது, இந்த மரத்தில் நான் இறக்கி வைத்த பிரச்சனைகள் துன்பங்கள் எல்லாம் பாதியாகக் குறைந்திருக்கும். இதனால் நான் அன்றைய வேலையை மகிழ்ச்சியோடு செய்வேன்” என்றார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் தச்சரை வியப்போடு பார்த்தார்.
ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பிரச்சனைகளையும் துன்பங்களையும் சுமைகளையும் இறக்கிவைப்பதற்கு ஓர் இளைப்பாறுதல் மரம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்! நற்செய்தியில் இயேசு இளைப்பாறுதலைத் தருவதாகச் சொல்கின்றார். இயேசு தருகின்ற இளைப்பாறுதல் எத்தகையது என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு வாழ்ந்த காலத்தில் மக்களுடைய வாழ்க்கை மிகவும் சுமை நிறைந்ததாக இருந்தது. ஒருபக்கம் உரோமையர்களின் ஆட்சியின்கீழ் அவர்கள் துன்பங்களைச் சந்தித்து வந்தார்கள் எனில், இன்னொரு பக்கம் சமயத்தலைவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட பரிசேயர்கள் விதித்த சட்டங்களால் அவர்கள் நிறையவே துன்பங்களை அனுபவித்தார்கள். இதனால் அவர்களுடைய வாழ்க்கை சுமை மிகுந்ததாக மாறியது. இத்தகைய சூழ்நிலையில் இயேசு, “…நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகின்றேன்” என்கிறார்.
இன்றைய முதல்வாசகத்தில் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தும் ஆண்டவர், “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே!” என்கிறார். ஆம், கடவுள் இன்றும் நம்மோடு இருப்பவர், அவர் நம்முடைய கண்ணீரைக் காண்பவர், நம் அழுகுரலைக் கேட்கின்றவர். அப்படிப்பட்டவரிடம் நம் சுமைகளை இறக்கி வைக்கும்போது, அவர் நமக்கு நிச்சயம் தரும் இளைப்பாறுதலைத் தருவார்.
சிந்தனைக்கு:
நானே உன்னை நலமாக்கும் ஆண்டவர் (விபா 15: 26)
ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள் (கலா 6: 2)
இயேசு தரும் இளைப்பாறுதலைப் பெற, நாம் அவரைப் போன்று கனிவோடும் மனத்தாழ்மையோடும் வாழ முயற்சி செய்வோம்.
இறைவாக்கு:
‘பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள் (1 பேது 3: என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் இயேசு தருகின்ற இளைப்பாறுதலைப் பெற, இரக்கத்தோடும் மனத்தாழ்மையோடும் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.