இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இறைவனை மட்டும் நம்பி இருப்பவர்களுக்கு அல்லது இறைவனின் பணியைச் செய்பவர்களுக்கு ஆண்டவர், உணவு உட்பட எல்லா தேவைகளையும் நிறைவு செய்வார். அதற்குச் சான்றாக இருக்கின்றது இன்றைய திருப்பலி முதல்வாசகம்.
நாளைய தினத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் ஆண்டவரிடம் அசையா நம்பிக்கைக் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
இறைப்பணிக்காக நாம் ஆண்டவரிடம் பெற்ற ஆசீர்வாதங்களை நாம் பிறருக்கு கொடையாக அளிக்க முன்வர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.” என இயேசு கூறுகிறார்.
நாம் செல்லும் இல்லங்களில் ‘அமைதி உரித்தாகுக’ என நாம் முழு உள்ளத்தோடு சொல்லும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
இந்த ஆண்டு விவசாயிகளுக்குத் தேவையான பருவமழை நன்கு பெய்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று நமது குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக குழந்தை இயேசுவிடம் வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.