ஜூலை 14 : நற்செய்தி வாசகம்

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 16-23

அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களை நோக்கிக் கூறியது: “இதோ! ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாயும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.

எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.

சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————————

அஞ்ச வேண்டாம்; நானும் உன்னோடு வருவேன்”

பொதுக்காலம் பதினான்காம் வாரம் வெள்ளிக்கிழமை

I தொடக்க நூல் 46: 1-7, 28-30

II மத்தேயு 10: 16-23

“அஞ்ச வேண்டாம்; நானும் உன்னோடு வருவேன்”

உடன் வரும் கடவுள்:

ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய செல்வியிடம், அவளுடன் பணியாற்றிய ஜெசி, ‘கடவுள் நம்மோடு இருக்கின்றார்; அவர் நம்மோடு உடன் வருகின்றார்’ என்று அடிக்கடி சொல்லி வந்தார். செல்விக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், ‘அது எப்படிக் கடவுள் உடன் வருவார்?’ என்ற ஐயம் இருந்துகொண்டே இருந்தது. ஒருநாள் அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்ப செல்விக்குத் தாமதமாகிவிட்டது. ‘இந்த நேரத்தில் நாம் இருக்கும் இடத்திற்குப் போகும் பேருந்து வராதே…! சரி வீட்டிற்கு ஆட்டோவில் போவோம்’ என்று அவள் ஆட்டோவிற்காகக் காத்திருந்தாள். ஆட்டோ வரவும் காலதாமதமானதால், செல்வி ஒருவிதமான பதற்றத்துடன், ‘வீட்டில் பிள்ளைகள் சாப்பிட்டிருப்பார்களா… வேலைக்குப்போன கணவர் திரும்பி வந்திருப்பாரா… தெரியவில்லையே?’ என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் ஆட்டோ ஒன்று வந்தது. அதில் அவள் ஏறிக்கொண்டு பயணத்தைத் தொடங்குகையில், இளைஞன் ஒருவன் வேகமாக ஓடிவந்து, அதில் ஏறி அமர்ந்தான். திடீரென அந்த இளைஞன் ஆட்டோவில் ஏறி அமர்ந்தது, செல்விக்கும்; ஏன் ஆட்டோ ஓட்டுநருக்கும் ஒருமாதிரித்தான் இருந்தது. ஆனாலும் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். செல்வி இறங்கிவேண்டிய இடம் வந்ததும், இளைஞனும் அவளோடு இறங்கினான். பின்னர் அவன் அவளிடம், “அக்கா! இந்த ஆட்டோ ஓட்டுநரைப் பற்றி எனக்கு நன்றாகத்தான் தெரியும். இவன் மிகவும் மோசமானவன். இவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காகவே நான் ஆட்டோவில் ஏறினேன்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து அந்த இளைஞன் ஓடி மறைந்தான்.

அப்பொழுதுதான் செல்விக்கு ஜெசி அடிக்கடி சொல்லும், ‘கடவுள் நம்மோடு இருக்கின்றார்; அவர் நம்முடன் வருகின்றார்’ என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. ‘கடவுள் என்னை இந்த ஆட்டோ ஓட்டுநரிடமிருந்து காப்பாற்றுவதற்காகத்தான் இந்த இளைஞன் வடிவில் வந்திருக்கின்றார்’ என்று செல்வி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

ஆம், கடவுள் நம்மோடு இருக்கின்றார்; நம்முடன் வருகின்றார் என்பதைத்தான் இந்த நிகழ்வும், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

தான் இருந்த கானான் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபொழுது, எகிப்திற்குப் போக வேண்டுமா என்று யாக்கோபு யோசித்துக்கொண்டிருக்கையில், ஆண்டவர் அவருக்குக் கனவில் தோன்றி, “எகிப்திற்குச் செல்ல அஞ்சவேண்டாம். நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன்” என்கிறார். இதன் பிறகு யாக்கோபு அஞ்சாமல் நம்பிக்கையோடு எகிப்திற்குச் செல்கின்றார்.

நற்செய்தியில் இயேசு தன் சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, “ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல் நான் உங்களை அனுப்புகிறேன்” என்று சொல்லிவிட்டு, “என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்கிறார். ஆம், முதல்வாசகமும், நற்செய்திவாசகமும் நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்: “நமக்கு முன்பாக ஆபத்துகள், துன்பங்கள் சவால்கள் இருந்தாலும், ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார். ஆதலால், நாம் அவரில் நம்பிக்கை வைத்து, அவருடைய பணியைச் செய்ய வேண்டும்.” நாம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, அவரது பணியைச் செய்யத் தயாரா?

Comments are closed.