இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 17:6-ல்,

“இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

ஆண்டவர் நமது வேண்டுதல்களுக்கு செவிசாய்க்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

இன்றைய பதிலுரைப்பாடல் திருப்பாடல் 17:8-ல்,

“உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.” என கூறப்பட்டுள்ளது.

இறைவன் நம் அனைவரையும் அலகையின் சோதனைகளிலிருந்து காத்தருள வேண்டி இந்த இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், இயேசு “விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.” எனக் காண்கிறோம்.

மருத்துவமனைகளில் நோயின் நிமித்தம் சிகிச்சை பெற்றுவரும் அனைவரையும் இயேசு தொட்டு சுகமாக்கிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

ஹிமாச்சல பிரதேசம் உட்பட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை, பெரு வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களுக்காக மன்றாடுவோம். கனமழை குறைந்து பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.