ஜூலை 12 : நற்செய்தி வாசகம்

வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7

அக்காலத்தில்

இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.

இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————————–

அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கும் இறைவன்

பொதுக்காலம் பதினான்காம் வாரம் புதன்கிழமை

I தொடக்க நூல் 41: 55-57; 42: 5-7, 17-24

II மத்தேயு 10: 1-7

அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கும் இறைவன்

கடவுளின் கைவண்ணம்:

பெரும் செல்வந்தவர் ஒருவர் தன் இறப்பு நெருங்கி வருவதை உணர்ந்தார். அவருக்குக் குழந்தையில்லாததால், அவர் தம் உடைமைகளையெல்லாம் ஏலம் விட்டு, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை அனாதை இல்லத்திற்கு கொடுக்கலாம் என்று முடிவுசெய்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட நாளில் தன்னுடைய உடைமைகளை ஏலம் விட்டார். அவர் ஏலம்விட்ட பொருள்கள் எல்லாம் நல்ல விலைக்கு, அதேநேரத்தில் விரைவாக விற்றன. அவரிடமிருந்த ஒரு பழைய வயலினைத்தான் யாருமே வாங்க முன் வரவில்லை.

அப்பொழுது பொருள்களை ஏலத்தில் வாங்க வந்திருந்த பெரியவர் ஒருவர் செல்வந்தர் கையில் வைத்திருந்த வயலினை வாங்கி, நன்றாகத் துடைத்து, கம்பிகளைச் சரிசெய்து, மீட்ட, அதிலிருந்து மிக அற்புதமான இசை பொங்கிவழிந்தது. அதைப் பார்த்துவிட்டு, ஏலம் எடுக்க வந்திருந்தவர்கள் போட்டி போட்டு அதை வாங்க விரும்பினார்கள். கடைசியில் ஒருவர் அந்த வயலினை பத்தாயிரம் உரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டார்.

ஆம், யாருமே வாங்க முன்வராமல் இருந்த வயலின் நல்லதொரு விலைக்கு வயலின் இசைக்கலைஞரின் கைபட்டதில் பத்தாயிரம் உரூபாய்க்கு ஏலத்திற்குப் போனது. சாதாரண மனிதர்களாகிய நம்மீது கடவுளின் கை படுகின்றபோது அல்லது கடவுள் நம்மை அழைக்கின்றபொழுது, நம்வழியாக அவர் பல அற்புதங்களையும் வல்ல செயல்களையும் செய்வார். இதைத்தான் இந்த நிகழ்வும், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

நற்செய்தியில் இயேசு பன்னிருவரைத் தம் பணிக்காக அழைக்கின்றார். இந்தப் பன்னிருவரும் மெத்தப் படித்தவர்களோ அல்லது வசதி படைத்தவர்களோ அல்லர்; சாதாரணமானவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்டவர் இயேசு தம் அதிகாரத்தை அளித்து, அவர்கள் பேய்களை ஓட்டவும், பிணிகளைப் போக்கவும் செய்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், யாரை மிதியானியரிடம் விலைக்கு விற்றார்களோ, அவரையே பஞ்சக் காலத்தில் யாக்கோபின் புதல்வர்கள் அணுகிச் செல்லுமாறு கடவுள் செய்கின்றார். ஆம், யோசேப்பின்மீது கொண்ட காழ்புணர்வினால், அவருடைய சகோதரர்கள் அவரை மிதியானியரிடம் விலைக்கு விற்க, கடவுள் அவரை பார்வோன் மன்னனுக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தி, “யோசேப்பிடம் செல்லுங்கள்; அவர் சொல்வதைச் செய்யுங்கள்” என்று பார்வோன் சொல்ல வைக்கின்றார். இதன்மூலம் நாம் நம் மனத்தில் பதிய வைக்கவேண்டிய செய்தி இதுதான்: “கடவுள் சாதாரண மனிதர்களை அழைத்தாலும், தன் அருளால், ஆற்றலால், அவர்களை அவர் வல்லமை மிக்கவராக மாற்றுகின்றார்.” ஆகையால், இந்த வல்லமை நிறைந்த கடவுளின் திருவுளம் நிறைவேற நாம் அவரது கருவிகளாக இருந்து செயல்படுவோம்.

Comments are closed.