புலம்பெயர்ந்தோர் நமது அன்பிற்கு தகுதியானவர்கள்
புலம்பெயர்ந்து நம் இல்லத்தின் கதவுகளைத் தட்டும் சகோதரர்கள் நமது அன்புக்கும், ஏற்றுக்கொள்ளலுக்கும் தகுதியானவர்கள் என்றும், அவர்களும் நம்மைப் போலவே பூமியில் உள்ளதை அனுபவிக்கும் உரிமை பெற்றவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 8 சனிக்கிழமை லாம்பதுசா திருத்தூதுப்பயணத்தின் பத்தாமாண்டு நிறைவையொட்டி Agrigento மறைமாவட்ட பேராயர் Alessandro Damiano அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளிடத்தில் ஒருமைப்பாடு, பகிர்வு ஆகியவற்றைக் காட்டவும், அவர்களுடனான புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஆழமான உறவின் பொறுப்புணர்விற்கு நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இறைவாக்கின் பாதைகளில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மறந்த பகுதிகளுக்காக திருஅவை தன்னிலிருந்து வெளியேறவும், உடன்பிறந்த உறவின் தைலத்தால் புலம்பெயர்ந்தோரை ஆற்றுப்படுத்தவும், அவர்கள் உடலின் காயங்களை கிறிஸ்துவின் காயங்களாக எண்ணி துடைக்கவும் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
அச்சம், வேறுபாடு போன்றவற்றினால் உங்களை நீங்களே சிறை வைத்துக் கொள்ளாமல் நற்செய்தியின் ஆன்மிக செல்வங்களால் நமது கடல் தீவுப்பகுதியை உரமாக்கக் கூடிய கிறிஸ்தவர்களாக இருங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புலம்பெயர்ந்தோருக்கு அர்ப்பணிப்புடன் உதவும் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தன் நன்றியினை அச்செய்தியில் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைத்தந்தையின் அருளும் இரக்கமும் அவர்களுக்குக் கிடைக்கப் பெறவும், இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாற்றியடைய செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் இந்தியாவின் ஜோவாய் மறைமாவட்ட ஆயராக Ferdinand Dhkar அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.