பொதுக் காலத்தின் பன்னிரண்டாம் வாரம்

அன்பு செய்தால், அன்பு செய்யப்படுவோம்

மற்றவர் என்னை அன்பு செய்யவேண்டும்; மற்றவர் எனக்கு உதவி செய்ய வேண்டும்; மற்றவர் நான் விரும்புவது போல நடக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்; ஆனால், நாம் அவ்வாறு நடந்து கொள்கின்றோமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. அன்பு செய்யப்பட விரும்பும் நாம், அன்பினை வழங்குவதற்குதானே முறை.

இன்றைய நற்செய்தியில் இயேசு மக்களிடம், “பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் உண்மையில் அற்புதமானவ; அதற்கு முன்பு சொல்லப்பட்டவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.

இயேசுவின் காலத்திற்கு முன்பு வரை, “எது உனக்குத் தீமையானது என நீ கருதுகிறாயோ, அதை மற்றவருக்குச் செய்யதே!” என்று சொல்லப்பட்டு வந்தது. இது எதிர்மறையாக இருக்கின்றது அல்லவா! இயேசு இதை நேர்மறையாகச் சொல்கின்றார்.

இயேசுவின் இப்போதனைக்கு அவரே மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இப்போதனைக்கு ஏற்ப பலர் வாழ்ந்தாலும், இன்றைய முதல் வாசகத்தில் வரும் ஆபிராம் அதன் படி வாழ்கின்றார்.

ஆபிராமின் ஆள்களுக்கும் அவரது சகோதரர் லோத்தின் ஆள்களுக்கும் இடையே சண்டை வருகின்றபோது, இருவரும் பிரிவதாக முடிவு செய்கின்றார்கள். அப்போது ஆபிராம் தன் சகோதர் லோத்துவிற்கு நீர்வளம் மிக்க யோர்தானின் சுற்றுப் பகுதியைத் தருகின்றார். இதனால் ஆண்டவர் ஆபிராமிற்கு ஆசி வழங்குகின்றார்.

இன்றைய பதிலுரைப்பாடலில், “ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?” என்று பாடினோம். தன்னலத்தை நாடாமல், பிறர் நலத்தை நாடுகின்றவரும் மாசற்ற வழியில் நடப்பவருமே ஆண்டவரின் இல்லத்தில் நுழைய முடியும். ஆகையால், நாம் ஆண்டவரின் இல்லத்தில் நுழைய இயேசுவைப் போன்று, ஆபிராமைப் போன்று அன்பை வழங்குவோம். பிறர் நலத்தோடு வாழ்வோம்.

Comments are closed.