பாஸ்கா காலத்தின் ஏழாம் வாரம்

செவ்வாய்க்கிழமை

I திருத்தூதர் பணிகள் 20: 17-27

திருப்பாடல் 68: 9-10, 19-20 (32a)

II யோவான் 17: 1-11a

கடவுளை மாட்சிப்படுத்துவோம்

மாட்சிப்படுத்து; மாட்சிப்படுத்தப்படுவாய்

ஒரு காலகட்டத்தில் கிறிஸ்துவைத் துன்புறுத்துகின்றோம் என்பது தெரியாமலேயே பவுல் கிறிஸ்துவைத் துன்புறுத்தி வந்தார். இந்நிலையில், பவுல் தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும் வழியில் இயேசு கிறிஸ்துவால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, அவருக்காகத் துன்புறவும் அவரது பணியைப் பிறவினத்தாருக்கு அறிவிக்கவும் அழைக்கப்படுகின்றார். பவுலும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து, அவரை மாட்சிப்படுத்துகின்றார். அவர் பொருட்டுப் பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொள்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் தனது இறப்பு நெருங்கி வருவதை அறிந்து, எபேசு நகர் மூப்பர்களை அழைத்து, அவர்களிடம், “இதுவரை நான் உங்களிடையே வந்து இறையாட்சியைப் பறைசாற்றினேன்… கடவுளின் திட்டம் எதையும் உங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிட வில்லை” என்கிறார். இவ்வாறு பவுல் தனக்குப் புதுவாழ்வு தந்த இயேசு கிறிஸ்துவை மாட்சிப்படுத்தினார்.

இன்றைய நற்செய்தியில் பெரிய குருவாம் இயேசுவின் இறைவேண்டல் இடம்பெறுகின்றது. இதில் அவர் தந்தை தன்னிடம் ஒப்படைத்த பணிகளைச் செய்து முடித்து, அவரை மாட்சிப்படுத்தியதாகக் கூறுகின்றார். உலகை மீட்க வேண்டும் என்பதுதான் கடவுளின் திட்டம். அதனைச் செய்து முடித்து இயேசு கடவுளை மாட்சிப்படுத்தினார்.

இயேசுவைப் போன்று, பவுலைப் போன்று கடவுளை மாட்சிப்படுத்தவேண்டும் என்ற அழைப்பினை இன்றைய நாளில் நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 68, “உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்தேத்துங்கள்” என்கிறது. எனவே, நாம் இயேசுவைப் போன்று, பவுலைப் போன்று கடவுள் நம்மிடம் ஒப்படைத்த பணியைச் செய்து முடித்து அவரை மாட்சிப்படுத்துவோம்.

தன்னை மீட்டவரை மாட்சிப்படுத்திய இளைஞன்

ஒரு நாள் காலையில் பங்குப் பணியாளரைச் சந்திக்க வந்த ஓர் இளைஞன், “சுவாமி! நான் மிகப்பெரிய பாவி! நான் செய்யாத பாவமே இல்லை. அதனால் எனக்கு மன்னிப்பு என்பதே இல்லை” என்று சொல்லிக் கண்ணீர் விட்டு அழுதான்.

பங்குப் பணியாளர் அவன் சொன்னதை அமைதியாகக் கேட்டுவிட்டு, “தம்பி! இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதை நீ நம்புகிறாயா? என்றார். “ஆமாம், நான் அதை முழுமையாக நம்புகிறேன்” என்றான் அவன். “ஒருவேளை அவர் இப்போது, இதே பகுதியில் இருக்கின்றார் என்பது உனக்குத் தெரியவந்தால், நீ அவரைத் தேடிச் செல்வாயா? மாட்டாயா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் பங்குப் பணியாளர்.

“இதிலென்ன ஐயம். நான் அவரைக் கட்டாயம் தேடிச் செல்வேன்” என்றான் அவன். “நீ அவரைத் தேடிக் கண்டடையும் பட்சத்தில் அவரிடம் என்ன கேட்பாய்?” என்று பங்குப் பணியாளர் அவனிடம் கேட்டு, அவனது பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தார். இளைஞன் அவரிடம், “நான் என் பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்பேன்” என்றான். “இயேசு அதற்கு என்ன பதில் சொல்வார் என்று நீ நினைக்கிறாய்?” என்று கடைசியாக ஒரு கேள்வியைக் கேட்டார் பங்குப் பணியாளர்.

சிறிது நேரத்திற்கு அவனிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. பிறகு அவன் அவரிடம், “நான் உன் பாவங்களை மன்னிக்கின்றேன் என்பார்” என்றான். உடனே பங்குப் பணியாளர் அவனிடம் தீர்க்கமாக, “இயேசு நீ எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் அவர் உன் பாவங்களை மன்னிக்கத் தயார். அதனால் நீ உன் பாவங்களை அவரிடம் அறிக்கையிடு” என்றார்.

இதற்குப் பிறகு அவன் தன் பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிட்டு புதியதொரு மனிதனாக மாறி, அவரது வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினான்.

கடவுள் தனக்குப் புதிய வாழ்வைத் தந்ததையடுத்து, இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் கடவுளை மாட்சிப்படுத்தினான். கடவுள் நமக்கும் புதியதொரு வாழ்வைத் தந்திருக்கின்றார். அதைக் கொண்டு, நாம் அவரை மாட்சிப்படுத்துவோம்.

Comments are closed.