இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், “ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்’” என ஆண்டவர் கூறுகிறார்.

உலக மீட்பிற்காக தாவீது குலத்தில் இயேசுவை தோன்றச் செய்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில் “இயேசு கிறிஸ்துவே, நீரே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; நீர் எம்மீது அன்புகூர்ந்து உமது இரத்தத்தினால் பாவங்களிலிருந்து எங்களை விடுவித்தீர்.” என கூறப்பட்டுள்ளது.

தமது விலை மதிப்பற்ற இரத்தத்தினால் நம்மை நமது பாவங்களில் இருந்து விடுவித்த நமதாண்டவர் இயேசுவுக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தியில் சீடர்களின் பாதங்களைக் கழுவிய இயேசுவிடமிருந்து நாம் தாழ்ச்சியைக் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

இன்றையப் புனிதரான இயேசு சபை குருவான புனித ஜோஸ் மரிய ரூபியா, திருஇருதய பக்தியையும், நற்கருணைநாதர் பக்தியையும் அதிக அளவில் பரப்பி வந்தார்.

உலக மக்களிடையே திருஇருதய பக்தியும், நற்கருணைநாதர் பக்தியும் மேலும் தழைத்தோங்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.