இறை இரக்கத்தின் ஞாயிறு
விண்ணகத் தந்தையைப் போல்!
கடலை விடவும் பெரிது!
விண்ணகத் தந்தையைப் போல்!
கடலை விடவும் பெரிது!
ஒரு சிற்றூரிலிருந்து சிலர் இன்பச் சுற்றுலா சென்றனர். பல இடங்களையும் சுற்றிப் பார்த்த அவர்கள் மாலை வேளையில் கடற்கரைக்குச் சென்றனர். அது மிகவும் இரம்மியமாக இருந்தது.
அப்போது அவர்களோடு சென்ற ஒரு மூதாட்டி சத்தமாக அழத் தொடங்கினாள். அதைப் பார்த்துவிட்டு அவளுக்குப் பக்கத்தில் இருந்த பெரியவர் ஒருவர், ‘எல்லாரும் கடலைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கையில், இவள் மட்டும் எதற்கு இப்படி அழுகின்றாள்?’ என்று மனத்தில் நினைத்துக்கொண்டு, “இப்போது எதற்காக நீங்கள் இப்படி அழுகின்றீர்கள்?” என்றார்.
உடனே மூதாட்டி தன்னுடைய கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துகொண்டு, “என் வாழ்நாளில் இப்போதுதான் கடலை முதன்முறையாகப் பார்க்கின்றேன். அது இவ்வளவு பெரிதாக இருக்குமா? என்றுதான் எனக்கு அழுகை வந்துவிட்டது” என்றாள். சிறிது நேரத்திற்கு எதுவும் பேசாமல் இருந்தக பெரியவர், மூதாட்டியிடம், “கடல் இவ்வளவு பெரிது என்று வியக்கின்றீர்கள் அல்லவா! இந்தக் கடலை விடவும் பெரிது கடவுளின் இரக்கம்” என்றார்.
பெரியவர் மூதாட்டியிடம் சொன்னதுபோல, கடவுளின் இரக்கம் கடலை விடவும் பெரிது. இன்று நாம் இறை இரக்க ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். 200௦, ஏப்ரல் 30 ஆம் நாள் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுல், பவுஸ்தினாவிற்குப் புனிதர் பட்டம் வழங்கும் திருச்சடங்கில், “ஒவ்வோர் ஆண்டும் உயிப்புப் பெருவிழாவிற்கு அடுத்து வரும் ஞாயிறு இறை இரக்கத்தின் ஞாயிறாகக் கொண்டாடப்படும்” என்று அறிவித்தார். அவர் சொன்னது போன்று, அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வோர் ஆண்டும் இறை இரக்கத்தின் ஞாயிறு கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நல்ல நாளில், இறை இரக்க ஞாயிறு நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்பதை இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தைப் பின்னணியில் சிந்திப்போம்.
அமைதியை வழங்கிய உயிர்த்த ஆண்டவர்
மனிதர்கள் எல்லா நேரமும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும் சவால்களும் அவர்களை மாற்றிவிடுகின்றன. இயேசுவின் சீடர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் அவரோடு மூன்றாண்டு காலம் உடனிருந்து, அவரோடு உண்டார்கள், அவரோடு பணிசெய்தார்கள். அவரிடமிருந்து பல நன்மைகளைப் பெற்றார்கள். என்றாலும், அவர்களின் உயிருக்கு ஆபத்து வந்தபோது அவர்கள் அவரைத் தனியே விட்டுவிட்டு ஓடினார்கள். பேதுரு அவரைத் தனக்குத் தெரியாது என்று மறுதலிக்கவும் செய்தார்.
தன்னிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றுவிட்டு, ஆபத்து என்று வரும்போது தன்னைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போன மனிதர்களை மீண்டுமாகச் சிந்திக்கும் ஒருவர் அவர்களைக் கடுமையாகத் திட்டலாம்; ஏன், பேசாமல் கூட இருக்கலாம்; ஆனால், ஆண்டவர் இயேசு தன்னைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போன சீடர்களுக்குக் காட்சியளிக்கும்போது, அவர்களைக் கடிந்துகொள்ளவோ, திட்டவோ இல்லை. மாறாக, அவர் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்கிறார். இதை அவர் மும்முறை சொல்வதும் கவனத்திற்குரியது.
இயேசு தரும் அமைதி என்பது இவ்வுலகம் தர முடியாத அமைதி (யோவா 14: 27); தவிர, அது எல்லா நலன்களையும் நன்மைகளையும் உள்ளடக்கியது. அத்தகைய அமைதியை இயேசு, தன்னை விட்டுவிட்டு ஓடிப்போன சீடர்களுக்குத் தருவதும், அவர்களை மீண்டுமாகப் பணியில் அமர்த்துவதும், அவர் எத்துணை இரக்கமும் அன்பும் கொண்டவர் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. இதையே இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 118 இல் அதன் ஆசிரியர், “ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு” என்கிறார்.
தன்னை விட்டுவிட்டு ஓடிப்போனவர்களுக்கும் மறுதலித்தவருக்கும் ஆசி கூறிய வகையில் இயேசு உண்மையில் பேரிரக்கமுள்ளவரே!
இரக்கத்தைப் பிறருக்கும் காட்டினார்கள்!
இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வில் தன்னிடமிருந்து நலம்பெற்றவர்களிடம் அடிக்கடிச் சொல்வது, “இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்பதுதான். விதிவிலக்காக, அவர் கெரசேனர் பகுதியில் இருந்த பேய் பிடித்திருந்த மனிதரிடம், “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு, உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” (மாற் 5:19) என்பார். உயர்த்த ஆண்டவர் இயேசு தம் சீடர்களைச் சந்திக்கும்போது மேலே உள்ள வார்த்தைகளை நேரடியாக அவர்களிடம் சொல்லியிருக்க மாட்டார். ஆனால், இயேசு தங்கள்மீது காட்டிய இரக்கத்தையும் பேரன்பையும் தங்கள் போதனையின் வாயிலாகவும், வாழ்வின் வாயிலாகவும் அவர்கள் மற்றவருக்கு வெளிப்படுத்தினார்கள்.
இன்றைய முதல வாசகத்தில், “திருமுழுக்குப் பெற்றவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும்… நிலைத்திருந்தார்கள்” என்றொரு குறிப்பு வருகின்றது. திருத்தூதர்கள் எதைக் கற்பித்திருப்பார்கள் என்று நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, அது அவர்கள் இயேசுவிடமிருந்து பெற்ற இரக்கமும் பேரன்புமாக இருக்கலாம். இவ்வாறு திருதூதர்கள் தாங்கள் இயேசுவிடமிருந்து பெற்ற இரக்கத்தையும் மன்னிப்பையும் பேரன்பையும் திருமுழுக்குப் பெற்றவர்களுக்குக் கற்பித்தார்கள். அவர்களோ அதை தங்களால் நற்செயல்களாலும் இரக்கச் செயல்களாலும் மற்றவருக்கு வெளிப்படுத்தினார்கள். ஆகவேதான் தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் தங்களிடம் இருந்ததை இல்லாதவருக்குப் பகிர்ந்தளித்து, தேவையில் உழல்வோர் யாருமின்றி பார்த்துக்கொண்டார்கள்.
எனில், கடவுளிடமிருந்து பெற்ற இரக்கத்தையும் பேரன்பையும் மற்றவருக்குக் காட்டுவதே நீதியும் நேர்மையுமாகும்.
இரக்கம் காட்டுவோருக்குக் கிடைக்கும் கைம்மாறு
கடவுளின் இரக்கத்தையும் பேரன்பையும் மற்றவர்களுக்குக் காட்டும்போது துன்பங்கள் வராமல் இருப்பதில்லை; நிச்சயம் வரும். இதற்காக ஒருவர் இரக்கத்தையும் பேரன்பையும் மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்துவிடக் கூடாது என்பதைப் பேதுரு இன்றைய முதல் வாசகத்தில் விளக்கிக் கூறுகின்றார்.
தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் இறையன்புக்கும் பிறரன்புக்கும் சாட்சிகளாய்த் திகழ்ந்தார்கள். இதனாலேயே அவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்கள். இப்படித் துன்பங்களை அனுபவித்த ஒருசிலர் மனம் சோர்ந்து போயிருந்த நிலையில்தான் பேதுரு அவர்களிடம், நீங்கள் அனுபவிக்கும் துன்பம் சிறு காலம்தான்; உங்கள் நம்பிக்கை மெய்ப்பிக்கப்படவே நீங்கள் துயருறுகின்றீர்கள் என்று சொல்லிவிட்டு, நீங்கள் பேருவகையும் ஆன்ம மீட்பையும் பெறுவீர்கள் என்கிறார்.
Comments are closed.