இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவனின் மன்னிப்பினை நாடி இப்புனித வாரத்தில் நல்லதொரு பாவசங்கீர்த்தனத்தை நாம் செய்ய வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட எசாயா நூலில், “இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?” என கூறப்பட்டுள்ளது.

நம்மை புறம் பேசுவோருக்கும், நம்மை இகழ்வோருக்கும் நமது பதில் மொழி அமைதி என்னும் ஆயுதம் ஒன்று மட்டுமே இருக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இந்த நாள் முழுவதும் நம்முடைய பேச்சிலும், செய்கின்ற செயல்கள் அனைத்திலும் தூய ஆவியானவர் நம்மை வழி நடத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ‘‘இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள்.” என வாசிக்கின்றோம்.

“பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்.” (1 திமொ 6: 10). என புனித பவுல் கூறுகிறார்.

தீமைகளுக்குக் காரணமான பொருள் ஆசையை நாம் அனைவரும் விட்டுவிட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இந்த புனித வாரத்தில் நாம் செய்யும் பக்தி முயற்சிகள் அனைத்தும், இறைவனுடைய இரக்கப்பெருக்கமும், அவரது அருளும் நமக்குக் கிடைத்திடும் வகையில் அமைந்திட இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.