ஏப்ரல் 6 : நற்செய்தி வாசகம்

இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15

பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார். அப்போது சீமோன் பேதுரு, “அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார். இயேசு அவரிடம், “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார். தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ‘உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்றார்.

அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்”

ஆண்டவருடைய இராவுணவு

I விடுதலைப் பயணம் 12: 1-8; 11-14

II 1 கொரிந்தியர் 11: 23-26

III யோவான் 13: 1-15

“நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்”

இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றிய மன்னர்:

பிரான்ஸ் நாட்டை ஆண்ட மன்னர்களில் மாமன்னர் ஒன்பதாம் லூயிசிற்கு (1215- 1270) மக்கள் மனத்தில் ஒரு தனி இடம் உண்டு. அவர் சிறுவனாக இருந்தபோது, ஒருநாள் அவருடைய தாய் அவரிடம், “என் அன்பு மகனே! நீ பாவம் செய்வதை விடவும், என் காலடியில் விழுந்து சாவதே மேல்!” என்றுரைத்தார். இவ்வார்த்தைகளை எப்போதும் தன் மனக் கண்முன்னால் வைத்திருந்த அவர் அதன்படியே வாழ்ந்து வந்தார். குறிப்பாக, அவர் இறைவேண்டலுக்கு மிகுதியான நேரம் ஒதுக்கினார், நோன்பிருந்தார், ஒறுத்தல் முயற்சிகளைச் செய்தார். இவற்றையெல்லாம் அவர் யாருக்கும் தெரியாமலேயே செய்துவந்தார்.

இதைவிடவும் அவர் ஏழை எளியவர்களுக்கு வாரி வாரி வழங்கினார். தான் உணவு உண்ட அதே மேசையில், பிச்சைக்காரர்களை அழைத்து வந்து, தன்னோடு சாப்பிடச் சொன்னார். அனாதைகள், கைவிடப்பட்டவர்கள், விலைமகளிர் யாவரும் தங்குவதற்கு இல்லாம் அமைத்துத் தந்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தொழுநோயார்களின் காலடிகளைக் கழுவினார். தொழுநோயாளர்கள் அருகில் செல்வதற்கே பலரும் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், மாமன்னர் ஒன்பதாம் லூயிஸ் தொழுநோயாளர்களின் காலடிகளைக் கழுவி, இயேசுவின் உண்மையான சீடராகி, பின்னாளில் திருஅவையால் புனிதராக உயர்த்தப்பட்டார்.

ஆம், இன்று நாம் ஆண்டவருடைய இறுதி இராவுணவை நினைவுகூர்கின்றோம். இதில் அவர் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்றார். இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதன் மூலம் நமக்கு எதை உணர்த்துகின்றார் என்று சிந்திப்போம்.

முன்மாதிரி காட்டிய இயேசு:

ஒரு தலைவன் என்பவன் தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவேளை அவன் முன்மாதிரியாக இல்லாத பட்சத்தில், அவனுக்குக் கீழ் உள்ளவர்களும் அவ்வாறுதான் இருப்பார்கள்.

இயேசு, ஆண்டவராகவும் போதகராகவும் இருந்தார். அதே வேளையில், அவர் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர், பரிசேயரைப் போன்று சொல்வது ஒன்றும் செய்வதுமாக இல்லாமல் (மத் 23:3), சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார் (லூக் 24:19). இயேசு சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார் என்பதற்கு மிகப்பெரிய சான்றாக இருப்பதுதான் அவர் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியது. இயேசு தன்னுடைய சீடர்களிடம், “உங்களுள் பெரியவராக இருக்க விருப்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்” (மத் 20:26) என்றார். இதை அவர் சொன்னது மட்டுமல்லாமல், வாழ்ந்தும் காட்டினார்.

இயேசு வாழ்ந்த காலக்கட்டத்தில் பாலஸ்தீன் நாட்டில் சரியான சாலைகள் கிடையாது. அதைவிடவும், சாலைகள் எங்கும் புழுதி படிந்திருக்கும். ஆகவே, வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது ஒருவர் தம் காலடிகளைக் கழுவிவிட்டுத்தான் வரவேண்டும். மேலும் காலடிகளைக் கழுவும் வேலையை வீட்டில் உள்ள அடிமைகள்தான் செய்தார்கள். அப்படி இருக்கையில் இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்றார். இங்கு இன்னொரு செய்தியை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அது என்னவெனில், யூத இரபிகள் தங்களது சீடர்களை அடிமைகளைப் போன்று நடத்தினார்கள் என்பதுதான். இயேசு தம் சீடர்களை அடிமைகளாகவோ, பணியாளர்களாகவோ கருதாமல், நண்பர்களாகவே கருதினார் (யோவா 15:15) என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் யூத இரபிகள் தங்கள் சீடர்களை அடிமைகளாகக் கருதியதன் அடிப்படையில் பார்த்தால், அடிமைகளான சீடர்கள் தன் காலடிகளைக் கழுவ விடாமல், அவர்களுடைய காலடிகளைக் கழுவுகிறார் இயேசு. இது இயேசு செய்த மிகவும் புதுமையான செயல் என்றுதான் சொல்லவேண்டும்.

இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதன் மூலம் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள் (லூக் 22:24) தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்று முன்மாதிரி காட்டுகின்றார்.

பாவங்களைக் கழுவும் இயேசு:

இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதை, அவர் நம் பாவங்களைக் கழுவித் தூய்மைப்படுத்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். இந்த உண்மையை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஒத்தமை நற்செய்தி நூல்களில் இடம்பெறுகின்ற இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வு யோவான் நற்செய்தியில் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக, அவர் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்ற நிகழ்வு இடம்பெறுகின்றது. மத்தேயு நற்செய்தியில் இயேசு, கிண்ணத்தைக் கையில் எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்” (மத் 26:28) என்கிறார். யோவானும் தனது முதல் திருமுகத்தில் “இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்” (1 யோவா 1:7-9) என்கிறார். இதன்மூலம் இயேசுவின் இரத்தம் நம் பாவங்களைக் கழுவித் தூய்மையாக்குகின்றது என்று புரிந்துகொள்ளலாம்.

இப்போது நாம் இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதன் மூலம் எவ்வாறு நம் பாவங்களைக் கழுவினார் என்பதற்கு வருவோம். தண்ணீருக்குத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் இருக்கின்றது (எண் 31:23) என்று திருவிவிலியம் கூறுகின்றது. மேலும் திருமுழுக்குச் சடங்கின்போது அருள்பணியாளர் திருமுழுக்குப் பெறுகிறவரின் தலையில் தண்ணீர் ஊற்றி, “தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் நான் உன் பாவங்களைக் கழுவுகிறேன்” என்பதும் தண்ணீருக்குப் பாவங்களைப் போக்கும் ஆற்றல் உண்டு என்பதற்குச் சான்றாக இருக்கின்றது நற்செய்தியில் இயேசு பேதுருவின் காலடியைக் கழுவ வரும்போது, அவர், “நீர் என் காலடிகளைக் கழுவ விடமாட்டேன்” என்கிறார். அப்போது இயேசு அவரிடம் சொன்ன, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்ற வார்த்தைகளைக் கொண்டு பார்க்கும்போது, இரத்தத்தால் மட்டுமல்ல தண்ணீரால் பாவங்கள் கழுவப்படாத யாருக்கும் இறையாட்சியில் பங்கு இல்லை என்று புரிந்துகொள்ளலாம்.

ஆகவே, இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியது அவரது தாழ்ச்சியை உணர்த்துவது என்றால், அவர் சீடர்களின் காலடிகளைக் கழுவியது, நம் பாவங்களைக் கழுவிப் போக்கி விட்டார் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

இயேசு செய்தது போல் நாமும் செய்வோம்:

இயேசு சீடர்களிடம் காலடிகளைக் கழுவியது ஒரு முக்கியமான செயல் எனில், அதன்பிறகு அவர் தன் சீடர்களுக்குச் சொன்ன, “ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கின்றீர்கள்” என்பதும் முக்கியமானது.

இன்றைக்குப் பலர் முதன்மையான இடத்தை, முதல் மரியாதையைப் பெற விரும்புகின்றார்கள். இதனால் அவர்களுக்கு மற்றவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதே இல்லை. காலடிகளைக் கழுவது என்பது ஒருவர் தம்மையே தாழ்த்திக் கொள்வதன் அடையாளம். 2013 ஆம் ஆண்டு வந்த பெரிய வியாழன் அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் காசா டெல் மர்மோ என்ற சிறைச்சாலைக்குச் சென்று, அங்கிருந்த கைதிகளின் காலடிகளைக் கழுவினார். அந்தக் கைதிகளில் பெண்கள் இருந்தார்கள்; பிற சமயத்தவரும், பிற சபைச் சார்ந்தவர்களும் இருந்தார்கள். வழக்கமாக, திருத்தந்தையர்கள் வயது முதிர்ந்த அருள்பணியாளர்களின் காலடிகளைக் கழுவுவர். திருத்தந்தை பிரான்சிசோ கைதிகளின் காலடிகளைக் கழுவித் தாழ்ச்சிக்கு இலக்கணமானார்.

இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் அவரை போன்று நம்மை தாழ்த்திக்கொண்டு மற்றவருக்குப் பணிவிடை செய்வது மட்டுமல்லாமல், அவரைப் போன்று நம்மையே பிறருக்காகக் கையளிக்க முன்வரவேண்டும். இதை நாம் கட்டாயத்தினால் அல்ல, விருப்பத்தோடு செய்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.

Comments are closed.