வாழ்வுதரும்வார்த்தை (பிப்ரவரி 21)
பொதுக் காலத்தின் ஏழாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I சீராக்கின் ஞானம் 2: 1-11
திருப்பாடல் 37: 3-4, 18-19, 27-28, 39-40 (5b)
II மாற்கு 9: 30-37
“இழிவு வரும்போது பொறுமையாய் இரு”
பணிவாழ்வில் வரும் இன்பமும் துன்பமும்!
இன்றைய காலகட்டத்தில் கடவுளுக்கெனத் தம்மை அர்ப்பணித்து, அவரது பணியைச் செய்வோர் வெகு சொற்பமே! இவர்கள் தங்களது வாழ்வில் வரும் சவால்களை எவ்வாறு எதிர்கொண்டு, பணிசெய்ய வேண்டும் என்ற தெளிவினைத் தருகின்றது இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை.
சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம், “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள். உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு; உறுதியாய் இரு. துன்ப வேளையில் பதற்றமுடன் செயலாற்றாதே; இழிவு வரும்போது பொருமையாய் இரு” என்கிறது. இவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.
கடவுளுக்கெனத் தம்மை அர்ப்பணித்து, அவரது பணியைச் செய்து வந்த இயேசு, தான் பாடுகள் படப்போவதாகவும், மூன்றாம் நாள் உயிர்த்தெழப் போவதாகவும் முன்னறிவிக்கின்றார். தந்தையாம் கடவுளின் பணியைச் செய்யும் தனக்குப் பாடுகளும் துன்பங்களும் உண்டு என்பது இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், துன்பம் இல்லாமல், மாட்சி இல்லை (யோவா 12: 24) என்பது இயேசுவின் முதன்மையான போதனையாக இருந்தது. இதனை இயேசு தம் சீடர்களுக்குக் கற்பித்தபோது, அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாமல், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். அப்போதுதான் இயேசு அவர்கள் நடுவில் ஒரு சிறுபிள்ளையை நிறுத்தி, “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்கிறார்.
கடவுளுக்கென நம்மை அர்ப்பணித்து, அவரது பணியைச் செய்யும்போது துன்பங்கள் வருவதைத் தவிர்க்க முடியாது அத்தகைய வேளையில், நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 37 நமக்கு நினைவுபடுத்துகின்றது. தாவீது பாடிய இத்திருப்பாடல், “ஆண்டவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்” என்கின்றது.
ஆகையால், கடவுளுடைய பணியைச் செய்யும்போது துன்பங்கள் உண்டு என்றாலும், அவர்மீது நாம் நம்பிக்கை வைத்து பணியைச் செய்யும்போது, அவர் நம் சார்பாகச் செயலாற்றுவார் என்ற உணர்வோடு அவரது பணியைச் செய்வோம்.
இதையே உன்னால் தாங்கிக்கொள்ள முடியாவிட்டால்?
கடவுளுக்குத் தம்மையே அர்பணித்து, அவரது பணியைச் செய்யவேண்டும் என்று ஆர்வமாய் இருந்தான் ஓர் இளைஞன்.
ஒருநாள் அவன் பங்குப் பணியாளரைச் சந்திக்கச் சென்றான். அப்போது அவர் உணவு சமைத்துக்கொண்டிருந்தார். அவன் அவர் அருகில் சென்று, அவரோடு பேசிக்கொண்டிருக்கையில், அடுப்பிலிருந்து வந்த புகையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவன் சமையலறையை விட்டு வெளியே ஓடிவந்தான்.
அதைப் பார்த்துவிட்டுப் பங்குப் பணியாளர் அவனிடம், “சாதாரண புகையையே உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே! நீ எப்படிக் கிறிஸ்துவின் பொருட்டு துன்பங்களைத் தாங்கிக் கொள்ளப் போகிறாய்?” என்றார். அவனால் எதுவும் பேச முடியவில்லை.
கடவுளுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவர் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், பாடுகள் இன்றி விண்ணகம் இல்லை.
ஆன்றோரின் வார்த்தை:
‘உங்களை விமர்சனம் செய்பவர்களால் மட்டுமே, உங்களை வலிமை மிக்கவர்களாய் மாற்ற முடியும்’ – இராபர்ட் கியோசாகி.
தீர்மானங்கள்
கடவுளின் மக்கள் நாம், அவர் பணி செய்யத் தயாராவோம்
துன்பங்களை எதிர்கொள்ளத் தயாராவோம். ஏனெனில், காற்றைக் கிழித்துக் கொண்டு போனால்தான் கப்பல் இலக்கை அடைய முடியும்.
கடவுள்மீது நம்பிக்கை வைத்துப் பணிவோம். ஏனெனில், அவரே நமக்கு அடைக்கலம்
Comments are closed.