பிப்ரவரி 14 : நற்செய்தி வாசகம்
பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 14-21
அக்காலத்தில்
சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அப்பொழுது இயேசு, “பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று அவர் கேட்க, அவர்கள், “பன்னிரண்டு” என்றார்கள்.
“ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று கேட்க, அவர்கள், “ஏழு” என்றார்கள். மேலும் அவர் அவர்களை நோக்கி, “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————–
பரிசேயரின் புளிப்புமாவு
பொதுக்காலத்தின் ஆறாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I தொடக்க நூல் 6: 5-8, 7: 1-5, 10
திருப்பாடல் 29: 1a, 2, 3ac-4, 3b, 9b, 10 (11b)
II மாற்கு 8: 14-21
பரிசேயரின் புளிப்புமாவு
தீமை உங்களை வெல்லவிடாதீர்கள்!
புளிப்புமாவு அளவில் சிறிதாக இருந்தாலும், அது மாவு முழுவதையும் புளிப்படையச் செய்துவிடும். இதெல்லாம் ஒரு பாவமா அல்லது தீமையா என்று நாம் தீமை செய்யத் தொடங்கினால், அந்தத் தீமை நம்மை முற்றிலுமாக அழித்துவிடும். அதனால்தான் பவுல், தீமை உங்களை வெல்ல விடாதீர்கள். நன்மையால் தீமையை வெல்லுங்கள்” (உரோ 12:21). என்கிறார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடரிடம், “பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாய் இருங்கள்” என்கிறார். அது என்ன பரிசேயர், ஏரோதியாரின் புளிப்பு மாவு என்ற கேள்வி எழலாம். புளிப்பு மாவு என்றாலே, அது ஏற்படுத்தும் தீய தாக்கம்தான் நினைவுக்கு வருகின்றது (மத் 13:33). பரிசேயர், ஏரோதியர் ஆகியோரின் புளிப்பு மாவு என்று சொல்கின்றபோது, அவர்களின் தவறான போதனை (மத் 16:12), அவர்களின் வெளிவேடம் (லூக் 12:1)¸ ஒழுக்கக்கேடான மற்றும் உலகப் போக்கிலான வாழ்க்கை (மாற் 6: 17-29) ஆகியவற்றைத்தான் இயேசு குறிப்பிடுகின்றார். இவற்றிலிருந்து தம் சீடர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று இயேசு பேசுகின்றார்.
தீமையைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று இயேசு பேசுகின்றபோது, சீடர்களோ தங்களிடம் உணவு இல்லாததைப் பற்றியே அவர் பேசுகின்றார் என்று தவறாக நினைக்கின்றார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டு அவர்களை வெள்ளத்தால் அழித்தொழிக்கின்றார். ஆண்டவர் மனிதர்களை அழித்தபோது, நோவாவிற்கு அவரது அருள் கிட்டுகின்றது. காரணம், அவர் மற்றவர்களைப் போன்று வாழாமல், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து (தொநூ 4:26), அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றார் (யாக் 4: 6-10).
நாமும் உலகப் போக்கின்படி வாழாமல், நோவாவைப் போன்று, ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடந்தால், அவரது அருள் நமக்குக் கிட்டும். ஏனெனில் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 29 இல் இடம்பெறுவது போல், “ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருகின்றார்”. அதனால் அவருக்குப் பணிந்து நடப்போம்.
பாவம் புழுவைப் போன்றது
ஒருசில பழங்கள் புழுவால் அரித்திருப்பதை நாம் பார்த்திருக்கலாம். அதைப் பார்த்துவிட்டு, புழு வெளியே இருந்து பழத்திற்குள் சென்றிருக்கும் என்றுகூட நாம் நினைக்கலாம். உண்மை அதுவல்ல. அறிவியலாளர்கள் சொல்கின்றார்கள்: “பூவாக இருக்கும்போதே புழு அதற்குள் போய் அமர்ந்துகொள்கின்றது. பின்னர் அது வேகமாக வளர்ந்து பழத்தை அரித்துத் தின்றுவிடுகின்றது.”
எப்போது பாவம் நம் இதயத்திற்குள் நுழைகின்றதோ, அப்போதே அது நம்மை அழிக்கத் தொடங்கிவிடுகின்றது. அதனால் பாவத்தைக் குறித்துக் கவனமாய் இருப்போம்.
இறை வார்த்தை
“பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில், நீங்கள் இப்போது சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்” (உரோ 6:14)
தீர்மானங்கள்
1) தீமையை விட்டு விலகி, நன்மை செய்யக் கற்றுக்கொள்வோம்.
2) ஆண்டவர்மீது பற்றுக்கொள்வோம். ஏனெனில், அவர் ஒருவரே நமக்கு அடைக்கலமும் அரணுமாய் இருக்கின்றார்.
3) உள்ளத்தில் உன்னதரைக் குடியமர்த்துவோம்.
– மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Comments are closed.