பிப்ரவரி 11 : நற்செய்தி வாசகம்

திரளான மக்கள் வயிறார உண்டார்கள்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-10
அக்காலத்தில்
மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பி விட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்” என்று கூறினார்.
அதற்கு அவருடைய சீடர்கள், “இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?” என்று கேட்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள் “ஏழு” என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசி கூறிப் பரிமாறச் சொன்னார்.
அவர்கள் வயிறார உண்டார்கள்; மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள். அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர்.
பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்; உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————
மக்களுக்கு உணவு கொடுத்த இயேசு
பொதுக்காலம் ஐந்தாம் வாரம் சனிக்கிழமை
I தொடக்க நூல் 3: 9-24
II மாற்கு 8: 1-10
மக்களுக்கு உணவு கொடுத்த இயேசு
வெளிச்சத்தில் உணவு உன்ன விளக்கைக் கொடுக்க மறுத்தவர்கள்:
ஓர் ஊரில் கன்னிப்பெண்களின் திருவிழா நடந்தது. அத்திருவிழாவில் கன்னிப்பெண்கள் அகல்விளக்குகளை ஆற்றில் விடுவது வழக்கம். அதன்படி அவர்கள் தாங்கள் ஏற்றிய அகல்விளக்குகளை ஆற்றில் விடுவதற்காக வந்தார்கள். இது ஒருபுறம் இருக்கையில், இன்னொருபுறம் ஆற்றங்கரையோரத்தில் இருந்த ஒரு குடிசையில் அன்றைக்குத்தான் அடுப்பு எரிந்தது. அந்த வீட்டில் இருந்த ஏழை, தான் தயாரித்த உணவை தன் மனைவி மற்றும் பிள்ளைகளோடு சேர்ந்து உண்ணலாம் என்றிருந்த வேளையில், நன்றாக இருட்டிவிட்டது. இத்தகைய சூழலில்தான் கன்னிப்பெண்கள் அகல்விளக்குகளை ஏந்திக்கொண்டு, ஆற்றை நோக்கி வந்தார்கள். அவர்கள் வைத்திருந்த அகல் விளக்கிலிருந்து வெளிப்பட்ட வெளிச்சத்தால் ‘வெளியே ஏதோ வெளிச்சம் வெளிச்சம்!’ என்று அதைப்பார்க்க குடிசையை விட்டு வெளியே வந்தான் அவன்.
அங்குக் கன்னிப்பெண்கள் கையில் அகல்விளக்குகளோடு இருப்பதைப் பார்த்துவிட்டு அவன் அவர்களிடம் தன் நிலையை எடுத்துச்சொல்லி, “யாராவது ஒருவர் உங்களிடம் உள்ள அகல்விளக்கைத் தந்தால், நானும் என் வீட்டில் உள்ளவர்களும் அந்த வெளிச்சத்தில் உணவு உட்கொண்டுவிடுவோம்” என்றான். அதற்கு ஒருபெண், “விளக்கைக் கொடுத்துவிட்டு, வெறுங்கையோடு இருப்பதா?” என்றாள். இன்னொரு பெண், “இது திருநாளுக்கான விளக்கு” என்றாள். வேறொரு பெண், “இது கடவுளுக்குரிய விளக்கு” என்றாள். இவ்வாறு யாருமே அந்த ஏழைக்கு விளக்கைக் கொடுக்காததால், அவன் இருட்டில் உணவு உண்ண வேண்டியதாகிவிட்டது.
பலர் இந்தக் கன்னிப்பெண்களைப் போன்றுதான் தங்களிடம் இருப்பதை இல்லாதவருக்குக் கொடுக்க மனமில்லாமல் இருக்கின்றார்கள்; இன்றைய நற்செய்தியில் இயேசு பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுக்கின்றார். அது குறித்துச் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு புறவினத்தார் மிகுதியாக வாழ்ந்த பகுதியில் இருந்தார் (மாற் 7: 31). மேலும் அவர் செய்த வல்லசெயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, பலரும் அவரிடம் வந்திருந்தார்கள். இவ்வாறு வந்தவர்கள் அவரோடு மூன்றுநாள்கள் இருந்து, அவருடைய போதனையை கேட்டார்கள். இதனால் அவர்களைப் பட்டினியாக அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைவார்கள் என்று இயேசு அவர்களுக்கு உணவுகொடுக்கின்றார்.
இயேசு செய்த இந்த வல்லசெயல் பசியோடு இருப்பவர்கள் அல்லது தேவையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களது தேவையை நாம் பூர்த்தி செய்யவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. மேலும் நம்மிடம் குறைவாகத்தானே இருக்கின்றது என்று நாம் கலங்கத் தேவையில்லை. நம்மிடம் இருப்பதை இயேசுவிடம் கொடுத்தால், அவர் அதை நிறைவாக மாற்றுவார் என்பதும் தெளிவாகின்றது.
சிந்தனைக்கு:
 வயிற்றுக்கு உணவிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் – பாரதியார்
 பிறருக்கு கொடுப்பதற்கு நாம் வசதியோடு இருக்கவேண்டும் என்ற தேவையில்லை, நல்ல மனதிருந்தாலே போதும்!
 கிறிஸ்துவின் அன்பிலிருந்து யாரையும் பட்டினி பிரித்துவிடாதவாறு பார்த்துக்கொள்வது ஒவ்வொருவரது கடமை. (உரோ 8: 35)
இறைவாக்கு:
‘உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார்’ என்பர் இயேசு. எனவே, எல்லாருக்கும் உணவளிக்கும் கடவுளின் கைகளில் கருவியாய்ச் செயல்படுவோம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.