வாழ்வுதரும்வார்த்தை (பிப்ரவரி 04)
பொதுக் காலத்தின் நான்காம் வாரம்
சனிக்கிழமை
I எபிரேயர் 13: 15-17, 20-21
திருப்பாடல் 23: 1-3a, 3b-4, 5, 6 (1)
II மாற்கு 6: 30-34
“எனக்க்கேதும் குறையில்லை”
பெற்ற நன்மையைப் பிறரோடு பகிர்வோம்:
ஒருவர் எந்தப் பின்னணியிலிருந்து வருகின்றாரோ, அந்தப் பின்னணியிலிருந்துதான் அவர் கடவுளைப் பார்ப்பார். இதில் இஸ்ரயேல் மக்கள் ஒன்றும் விதிவிலக்கில்லை. மேய்ச்சல் நிலங்களைத் தேடி, ஆடு மேய்க்கும் சமூகமாக இருந்த இஸ்ரயேல் மக்கள் கடவுளை ஆயனாகப் பார்த்தில் வியப்பில்லை (தொநூ 48: 15). இந்த இனத்திலிருந்து வந்த தாவீதும், அதுவும், ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீதும் கடவுளை ஆயராகவே பார்த்தார். இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 23 இதற்கொரு சான்றாக இருக்கின்றது.
கடவுளின் பாதுகாப்பையும் பராமரிப்பையும், அவரது நன்மைத்தனங்களையும் தன் வாழ்நாள் முழுவதும் உணர்ந்த தாவீது, “ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை” என்று பாடுகின்றார். ஒரு சாதாரண ஆடுமேய்க்கும் சிறுவனாக இருந்த தாவீதைக் கடவுள் இஸ்ரயேலின் அரசராக உயர்த்தி, அவருக்கு எல்லா நலன்களையும் வழங்கினார். அப்படியிருக்கும்போது தாவீதுக்கு என்ன குறையிருந்திருக்கும்? இதைத்தான் அவர் பாடலாகப் பாடுகின்றார்.
நற்செய்தி வாசகம் நல்ல ஆயாராம் இயேசு (யோவா 10) பணிபுரிந்துவிட்டுக் களைப்போடு வருகின்ற சீடர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களைத் தனிமையான இடத்திற்குச் சென்று ஓய்வெடுக்கச் சொல்கின்றார். மட்டுமல்லாமல், ஓய்வெடுக்கச் சென்ற நேரத்தில் மக்கள் அவரைத் தேடி வந்தபோது, அவர்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். ஆண்டவர் அறிவின் இறைவன் (1 சாமு 2:4). அதனால் அறியாமையிலும், பாவம் என்ற அடிமைத் தனத்திலும் இருந்த மக்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார்.
இவ்வாறு ஆண்டவரின் போதனையாலும், அவரது பராமரிப்பினாலும் பாதுகாப்பினாலும் பல்வேறு நன்மைகளை அடைத்திருக்கும் நாம், அதை நமக்குள் வைத்துக்கொள்ளாமல், மற்றவோடு பகிர வேண்டும் என்கிறது இன்றைய முதல் வாசகம். “நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை” என்று இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன.
எனவே, நல்ல ஆயனிடமிருந்து நன்மைகளைப் பெற்ற நாம் அவற்றை மற்றவருக்கும் வழங்குவோம்.
கடவுளின் பராமரிப்பை உணர்ந்த அருள்பணியாளர்:
மலைமேல் இருந்த தியான இல்லம் அது. அந்த தியான இல்லத்தில் அவ்வப்போது தியானம் நடக்கும். ஒருமுறை மூன்று நாள் தியானம் அங்கு நடைபெற்றது. மூன்று நாள் தியானம் முடிந்ததும், அந்தத் தியான இல்லத்திற்குப் பொறுப்பாய் இருந்த அருள்பணியாளர் மக்களையெல்லாம் அனுப்பிவிட்டுத் தியான இல்லத்திற்குள் வந்தபோது மின்சாரம் போய்விட்டது. இரவு நேரத்தில் ஒருநாளும் அங்கே மின்சாரம் போவதில்லை.
‘இந்த இரவு நேரத்தில் இப்படி மின்சாரம் போய்விட்டதே! இருட்டுக்குள் இருப்பது சற்று அச்சமாக இருக்கின்றதே!’ என்று அவர் சற்று பதற்றம் அடைந்தபோது, ஆயிரக்கணக்கான மின்மினிகள் கூட்டம் அவருக்கு மேல் இருந்த மரத்தில் சூழ்ந்துகொண்டு வெளிச்சத்தைக் கொடுத்தது, அக்காட்சியை அவர் கண்டபோது, கடவுளின் பராமரிப்பு தன்னோடு இருப்பதை நன்கு உணர்ந்தார்.
நம்மைக் காத்து வழிநடத்தும் நல்லாயன் இயேசு நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை. அதனால் அவரது உடனிருப்பு நம்மோடு எப்போதும் இருக்கின்றது என்பதை உணர்ந்து, அவரது இரக்கத்தையும் அன்பையும் மற்றவருக்கு வழங்குவோம்.
Comments are closed.