நவம்பர் 22 : நற்செய்தி வாசகம்
கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11
அக்காலத்தில்
கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.
அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார்.
மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————————
“நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்”
பொதுக்காலத்தின் முப்பத்து நான்காம் வாரம் செவ்வாய்க்கிழமை
I திருவெளிப்பாடு 14: 14-29
II லூக்கா 21: 5-11
“நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்”
இப்படியும் ஓர் ஆசிரியர்!:
ஜான் கோர்கோரன் (John Corcoran) என்றொருவன் இருந்தான். இவனுக்குச் சரியாக வாசிக்கவும் தெரியாது; எழுதவும் தெரியாது. ஆனாலும் இவனுக்குப் பாடம் கற்றுத் தந்த ஆசிரியர்கள் இவன்மேல் இரக்கப்பட்டு இவனைத் தேர்ச்சியடையச் செய்தனர். இப்படியே இவன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தான்.
இவனுடைய ஏமாற்று வேலை இத்தோடு முடிந்துவிடவில்லை. இவனுக்குத் தான் ஓர் ஆசிரியராக வேண்டும் ஆசை ஏற்பட்டது. ஆகவே, இவன் ஒரு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தான். அங்கு இவன் தன்னுடைய பாட வேளையில் வேறோர் ஆசிரியரை ஏற்பாடு செய்வான்; இல்லையென்றால் விடுமுறை எடுத்துக் கொள்வான். இப்படியே பதினேழு ஆண்டுகளை ஓட்டிவிட்டுக் கடைசியில் இவன் பணியிலிருந்து ஓய்வும் பெற்றான்.
வாசிக்கவும் தெரியாமல், எழுதாமல் தெரியாமல் ஒருவன் கல்லூரிப் படிப்பை முடித்து, பதினேழு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினான் என்றால், அவன் எவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரணமாக இருந்திருப்பான் என்று நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். இப்படி ஏமாற்றுவோர் எல்லா நிலைகளிலும் இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. இன்றைய நற்செய்தியில் இயேசு, “நீங்கள் ஏமாறதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு உணர்த்துவது என்ன என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
எருசலேம் நகருக்குள் நுழைந்த இயேசு அங்கு மக்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது சிலர் எருசலேம் திருக்கோயிலைப் பற்றி வியந்து பேசிக் கொண்டிருக்கும்போதுதான் அவர் அவர்களிடம், அதன் அழிவைப் பற்றிப் பேசுகின்றார். உடனே அவர்கள் இது எப்போது நிகழும்? இது நிகழ்வதற்கான அறிகுறி என்ன? என்று கேட்கின்றார்கள். இதற்கு இயேசு பதிலளிக்கும்போதுதான், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” என்கிறார்.
இயேசுவின் பதில் எருசலேம் திருக்கோயிலின் அழிவைப் பற்றியதாக இருந்தாலும், இறுதிக் காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பது பற்றியதாக இருக்கின்றது. பலர் தன்னுடைய பெயரைச் சொல்லி, நானே அவர் என்பார்கள். எனவே, நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். இயேசு தரும் இந்த விளக்கம், அவருடைய சீடர்களை எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது.
இன்றைய முதல் வாசகம் இயேசு நடுவராய் வந்து, ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார் என்கிறது. கடவுளிடமிருந்து நல்ல கைம்மாறு பெற, நாம் ஏமாற்றுக்காரர்களாய் இல்லாமல், இயேசுவின் உண்மைச் சீடர்களாய், அவர் வழி நடப்போம்.
சிந்தனைக்கு:
ஏமாற்று வேலைகள் எல்லா நேரமும் கைகொடுக்காது.
மானிட மகனுடைய வருகைக்காக எப்போதும் நாம் விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருப்போம்.
இறையாட்சியில் பங்கு பெற, நாம் இயேசுவின் வழியில் நடப்போம்.
இறைவாக்கு:
‘’உண்மையானவை எவையோ… அவற்றையே மனத்தில் இருத்துங்கள்’ (பிலி 4:8) என்பார் பவுல். எனவே, நாம் உண்மையின் வழியில் நடந்து, இயேசுவுக்குச் சான்று பகர்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.